Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பயணியருக்கு உதவ சாலை வசதி மையம் மாநில நெடுஞ்சாலை துறை திட்டம்

பயணியருக்கு உதவ சாலை வசதி மையம் மாநில நெடுஞ்சாலை துறை திட்டம்

பயணியருக்கு உதவ சாலை வசதி மையம் மாநில நெடுஞ்சாலை துறை திட்டம்

பயணியருக்கு உதவ சாலை வசதி மையம் மாநில நெடுஞ்சாலை துறை திட்டம்

ADDED : ஜூன் 18, 2025 10:54 PM


Google News
சென்னை:மாநில நெடுஞ்சாலைகளில், 10 இடங்களில், பயணியர் மற்றும் ஓட்டுநர்களுக்கான சாலை வசதி மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.

நாடு முழுதும், 1.32 லட்சம் கி.மீ., சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பராமரித்து வருகிறது. இச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்ய, 1,054 இடங்களில் சுங்கச்சாவடிகளும் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், சாலைகளில் உள்ள தனியார் உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதுடன், உணவுகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளது.

இதையடுத்து, தனியார் பங்களிப்புடன், 'ஹைவே நெஸ்ட்' என்ற பெயரில், வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்கான வசதிகளை ஏற்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டது. ஆனால், அது செயல்பாட்டிற்கு வரவில்லை.

இதற்கு மாற்றாக, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளின் இரு புறங்களிலும், 'ஹைவே நெஸ்ட் மினி' என்ற பெயரில், பெட்டிக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு, தேநீர், தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன.

இந்நிலையில், புதிய திட்டத்தை செயல்படுத்த, தமிழக நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்துள்ளது.

அதாவது, மாநில நெடுஞ்சாலைகளில், 10 இடங்களில், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் வசதிக்காக, சிற்றுண்டி சாலைகள், தங்கும் விடுதிகள், ஓய்வறை, மின் வாகனங்களுக்காக, 'சார்ஜிங் பாயின்ட்', முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய, சாலை வசதி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில், 12,625 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றின் வழியாக, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணித்து, தேசிய நெடுஞ்சாலைகளை அடைகின்றன.

மாநில நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தரமான உணவுகள், தங்கும் இடம், முதலுதவி, ரிப்பேர் மற்றும் சார்ஜிங் வசதிகளை, ஒருங்கிணைந்த இடத்தில் ஏற்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளது.

இதற்காக, அதிக வாகனங்கள் பயன்படுத்தும் சாலைகளில், 10 இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. துாத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர் மாவட்டங்களில், இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

தனியார் பங்களிப்புடன் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், 'மோட்டல்'களில் பயணியர் படும் அவஸ்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us