Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ காவலாளியை கொடூரமாக தாக்கி 'ரீல்ஸ் '; போதை கும்பல் வெறி

காவலாளியை கொடூரமாக தாக்கி 'ரீல்ஸ் '; போதை கும்பல் வெறி

காவலாளியை கொடூரமாக தாக்கி 'ரீல்ஸ் '; போதை கும்பல் வெறி

காவலாளியை கொடூரமாக தாக்கி 'ரீல்ஸ் '; போதை கும்பல் வெறி

ADDED : செப் 10, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் திருமண மண்டப காவலாளியை கொடூரமாக தாக்கி, ரீல்ஸ் எடுத்த போதை கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பழமலைநாதர் நகரை சேர்ந்தவர் கார்த்திக், 45; அங்குள்ள திருமண மண்டப காவலாளி. நேற்று முன்தினம் இரவு, மண்டபத்தில் காவல் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில், மண்டப சுற்றுச்சுவர் வழியாக வாலிபர்கள் மூவர் உள்ளே ஏறி குதித்தனர். அவர்களிடம், 'யார் நீங்கள்? இந்த நேரத்தில் ஏன் இங்கே வருகிறீர்கள்?' என, கார்த்திக் கேட்டுள்ளார்.

போதையின் உச்சத்தில் இருந்த அவர்கள், கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதத்தால், கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். உடல் முழுதும் ரத்த வெள்ளத்தில் கதறிய அவர், காலில் விழுந்து கெஞ்சுவதை வீடியோவாக பதிவு செய்த மூவரும், இன்ஸ்டாகிராமில் அதை பதிவு செய்தனர். மேலும், ஆத்திரம் தீரும் வரை கார்த்திக்கை கொடூரமாக தாக்கியதில், அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

பின், அதிகாலை, 5:00 மணியளவில், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆசாமிகள், அங்குள்ள கடை உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சிந்தாமணி நகரை சேர்ந்த ராஜேந்திரன், 58, சுந்தரமூர்த்தி, 60, ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

பின்னர், கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலம் வந்த அரசு பஸ்சை, மணலுார் ரயில்வே பாலம் அருகே வழிமறித்து ஏறினர். படியில் நின்ற அவர்களை உள்ளே வரும்படி கூறியதால், டிரைவர் கணேசன், 59, என்பவரை பீர் பாட்டிலை உடைத்து தலையில் அடித்தனர்.

படுகாயமடைந்த அவர் பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்தி சென்ற போதை கும்பல், டிரைவரை சரமாரியாக தாக்கினர்.

விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியதில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பழமலைநாதர் நகரை சேர்ந்த கந்தவேலு, 22, விக்னேஷ், 22, பாலாஜி என, தெரியவந்தது.

கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி, விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போதை ஆசாமிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

பகல், 12:30 மணியளவில், பெரியகண்டியங்குப்பம் ரயில்வே கேட் அருகே முந்திரிகாட்டில் போதை ஆசாமிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலில், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, எஸ்.ஐ., சந்துரு உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று, அவர்களை சுற்றி வளைத்தனர்.

போலீசை கண்டதும் கந்தவேலு, தன் கையில் வைத்திருந்த அரிவாளால் ஏட்டுகள் வீரமணி, வேல்முருகன் ஆகியோரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதனால் தற்காப்புக்காக சந்துரு, துப்பாக்கியால் சுட்டதில் கந்தவேலு கால் முட்டியில் காயமடைந்து சுருண்டு விழுந்தார். இதை பார்த்ததும் மற்ற இருவரும் தப்பியோடினர்.

ரயில்வே பாதையை கடக்க முயன்றபோது, தடுமாறி விழுந்ததில் விக்னேஷ், கை, கால்கள் முறிந்தது. அவர் போலீசிடம் பிடிபட்டார். பாலாஜி மட்டும் சிக்காமல் தப்பியோடி, தலைமறைவாகி விட்டார். காயமடைந்த போலீசார் மற்றும் போதை ஆசாமிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காயமடைந்த போலீசார், போதை கும்பலால் தாக்கப்பட்ட காவலாளி, அரசு பஸ் டிரைவர் உள்ளிட்டோரையும் எஸ்.பி., ஜெயக்குமார் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். போதை கும்பலின் கொடூர தாக்குதல் சம்பவம், விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கஞ்சா இல்லை; மது போதை தான்' எஸ்.பி., ஜெயகுமார் கூறியதாவது: மது போதையில் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கந்தவேலு, விக்னேஷ் இருவரும் அங்குள்ள காஸ் சிலிண்டர் கிடங்கில் கூலி தொழிலாளிகள். அவர்கள், கோயம்பேடு பழ மார்க்கெட்டிற்கு சென்று, அங்கும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். கந்தவேலு மீது விருத்தாசலத்தில் நான்கு அடிதடி வழக்குகள், கோயம்பேடில் ஒரு கொலை முயற்சி உட்பட மூன்று வழக்குகள் என, ஏழு வழக்குகள் உள்ளன. விக்னேஷ் மீது இரண்டு அடிதடி வழக்குகள் உள்ளன. மூவரும் காலையில் லோடு ஏற்ற மது அருந்தியபோது, போதை தலைக்கேறி இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இது கஞ்சா போதையால் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us