கோவையில் 6 உள்நாட்டு விமான சேவை குறைப்பு தொழில் முனைவோர் பாதிப்பு!
கோவையில் 6 உள்நாட்டு விமான சேவை குறைப்பு தொழில் முனைவோர் பாதிப்பு!
கோவையில் 6 உள்நாட்டு விமான சேவை குறைப்பு தொழில் முனைவோர் பாதிப்பு!
ADDED : ஜன 05, 2024 02:12 AM

கோவையிலிருந்து சென்னை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு செல்லும், ஆறு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், கொங்கு மண்டல தொழில் முனைவோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை விமான நிலையத்துக்கு அடுத்ததாக, கோவை விமான நிலையம் தான், அதிகளவு விமானங்களையும், பயணியரையும் கையாளுகிறது.
கடந்த ஆண்டு துவக்கத்தில், 22 உள்நாட்டு விமானங்களும், இரண்டு வெளிநாட்டு விமானங்களும் இங்கிருந்து இயக்கப்பட்டன.
ஆண்டுக்கு, 20 லட்சம் உள்நாட்டு பயணியர், 2 லட்சம் வெளிநாட்டு பயணியர், கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மூன்று மாதங்களில் மட்டும், கோவையிலிருந்து ஆறு உள்நாட்டு விமான சேவை குறைந்துள்ளது. இவை அனைத்துமே, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமான சேவைகளாகும்.
இந்த நிறுவனத்தின் விமானங்களின் இன்ஜின்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இன்ஜின் பற்றாக்குறை ஏற்பட்டு, 30 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னைக்கு மூன்று, ஹைதராபாதிற்கு இரண்டு, பெங்களூருக்கு ஒன்று என ஆறு தினசரி விமான சேவையை இந்த நிறுவனம் நிறுத்திக் கொண்டுள்ளது.
வரும் மார்ச் மாதத்துக்குள் மேலும் 40 விமானங்கள் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கொங்கு மண்டல தொழில் முனைவோர், கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில், கோவையிலிருந்து புதிய விமான சேவைகளை துவக்க வேண்டுமென்று, விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
- நமது நிருபர் -