ADDED : செப் 11, 2025 01:55 AM
சென்னை:குறைந்தபட்ச ஓய்வூதியமாக 6,850 ரூபாய் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவானந்தா சாலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில், அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, வரும் 30ம் தேதிக்குள் அரசு அறிவிப்பு வெளியாக உள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட சங்க நிர்வாகிகள், 'வரும் 30ம் தேதிக்குள் அரசு அறிவிப்பு வெளியிடவில்லை என்றால், அக்., 1ல் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம்' என, தெரிவித்தனர்.