15ம் தேதி 'கள்' இறக்கும் போராட்டம்; பனை ஏற சீமான் தீவிர பயிற்சி
15ம் தேதி 'கள்' இறக்கும் போராட்டம்; பனை ஏற சீமான் தீவிர பயிற்சி
15ம் தேதி 'கள்' இறக்கும் போராட்டம்; பனை ஏற சீமான் தீவிர பயிற்சி

திருச்செந்துார் அருகே, வரும் 15ம் தேதி நடக்க உள்ள, கள் இறக்கும் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க உள்ளார்.
அன்று பனை மரத்தில் ஏறி, கள் இறக்குவதற்காக, அவர் பனை மரத்தில் ஏற பயிற்சி எடுத்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், கள் இறக்க அனுமதி அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் என, கள் விற்க ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகள், பிரசாரம் செய்து வருகின்றன.
ரஷ்ய வோட்கா
தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில், கள் விற்க அரசு அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், கள் விடுதலை மாநாடு நடந்தது.
அதில் பங்கேற்ற சீமான் பேசுகையில், 'ரஷ்யாவில் வோட்கா போல், தமிழனின் தேசிய பானம் கள். அதை கள் என சொல்லாமல், பனஞ்சாறு, மூலிகைசாறு எனவும் சொல்லலாம். ஒருநாள் நானே பனை மரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன்' என்றார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வரும் 15ம் தேதி, உழவர் பாசறை சார்பில், துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம், பெரியதாழை, திருச்செந்துார் ஆகிய இடங்களில், கள் இறக்கும் போராட்டம் நடக்க உள்ளது.
பயப்பட வேண்டாம்
இதில், 'கள் எங்கள் உணவு; கள் எங்கள் உரிமை' என்ற கோஷத்துடன், சீமான் பனை மரம் ஏறி, கள் இறக்க உள்ளார்.
இதற்காக அவர் பனை மரத்தில் ஏறி, பயிற்சி எடுக்க உள்ளார். பனை மரத்தில் ஏற வேண்டாம் என, அவரது கட்சியினர் கூறியபோதும், நான் ஏறுகிறேன். பயப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அவர் ஏறுவதற்கு தகுந்த மரங்களை தேடும் பணியில், போராட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க, பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.
பனை விவசாயிகள்
மருத்துவ குணம் கொண்ட, ஏராளமான ஊட்டச்சத்து கள்ளில் உள்ளது. கள் மது வகையில் வராது. அது தமிழர்களின் பாரம்பரிய உணவு என்ற கொள்கையுடன், கள் விடுதலை போராட்டத்தில், சீமான் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்த பனை விவசாயிகளின் ஓட்டுகளை கவர, சில அறிவிப்புகளையும், சீமான் வெளியிட உள்ளார்.
வரும் 15ம்தேதி, அவர் பனை மரத்தில் ஏறி, கள் இறக்க உள்ளார். இது பனை ஏறும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
'இத்தனை காலமும் கள்ளுக்காக குரல் கொடுத்த அரசியல்வாதிகள் யாரும் இப்படியொரு போராட்டத்தை அறிவிக்கவில்லை. சீமான்தான், தான் அறிவித்த விஷயத்தில் உறுதியாக இருக்கின்றார்' என பனை ஏறும் தொழிலாளர்கள் சொல்கின்றனர். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது நிருபர்-