சிறப்பு ஊக்கத்தொகை ரூ.233 கோடி நிலுவை கரும்பு விவசாயிகளுக்கு பொங்கல் இனிக்குமா?
சிறப்பு ஊக்கத்தொகை ரூ.233 கோடி நிலுவை கரும்பு விவசாயிகளுக்கு பொங்கல் இனிக்குமா?
சிறப்பு ஊக்கத்தொகை ரூ.233 கோடி நிலுவை கரும்பு விவசாயிகளுக்கு பொங்கல் இனிக்குமா?
ADDED : ஜன 11, 2024 09:43 PM
நாமக்கல்:''தனியார் சர்க்கரை- ஆலைகளுக்கு கரும்பு வினியோகம் செய்த விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, 233.16 கோடி ரூபாயை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, இந்திய விவசாய சங்க கூட்டமைப்பான சிபாவின் முன்னாள் தேசிய தலைவர் விருத்தகிரி கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கூட்டுறவு 18, பொதுத்துறை இரண்டு, தனியார் துறை 24, என, 44 சர்க்கரை ஆலைகள் உள்ளன. அவற்றில் போதிய அளவு கரும்பு இல்லாதது, விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்ய முடியாமல் போனது உள்ளிட்ட காரணங்களால், ஒன்பது தனியார் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டு, தற்போது, 35 ஆலைகள் மட்டும் இயங்கி வருகின்றன.
சர்க்கரை ஆலை
மத்திய அரசு, கரும்பு டன்னுக்கு, நியாய ஆதார விலை அறிவிக்கிறது.
ஆனால் தமிழக அரசு, பரிந்துரை விலையை, 2017 முதல் நிறுத்திவிட்டது. அதற்கு பதிலாக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
அதன்படி, 2023 பிப்ரவரியில் சிறப்பு ஊக்கத்தொகை டன்னுக்கு, 195 ரூபாய் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
அத்தொகையை கூட்டுறவு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு, கரும்பு வினியோகம் செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வினியோகித்த விவசாயிகளுக்கு இதுவரை வங்கிக் கணக்கில் வரவு வைக்கவில்லை.
இது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு, 1 கோடியே 19 லட்சத்து 57,000 டன் கரும்புகளை, விவசாயிகள் வினியோகித்துள்ளனர். அதன்மூலம், 233.16 கோடி ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை நிலுவை உள்ளது.
வங்கிக் கணக்கு
அதை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தால் பொங்கல் பண்டிகை இனிப்பு பொங்கலாக அமையும். இல்லை எனில் கறுப்பு பொங்கலாக முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.