'ஸ்டிரைக் நடந்தாலும் பொங்கல் பஸ் ஓடும்'
'ஸ்டிரைக் நடந்தாலும் பொங்கல் பஸ் ஓடும்'
'ஸ்டிரைக் நடந்தாலும் பொங்கல் பஸ் ஓடும்'
ADDED : ஜன 04, 2024 09:57 PM
கடலுார்:''போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பயணியருக்கு பாதிப்பு இல்லாத வகையில், பொங்கல் பண்டிகையின் போது, தடையின்றி அரசு பஸ்கள் இயக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மணல் குவாரி கலவரம் தொடர்பாக, கடலுார் கோர்ட்டில் ஆஜராக வந்த அவர் கூறியதாவது:
போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள், கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சில் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதற்கு, முதல்வர் வழங்கும் நிதி தான் காரணம்.
டீசல் மானியம், மகளிருக்கு கட்டணமில்லா பயணம், மாணவர்களுக்கு இலவச பாஸ் போன்றவற்றுக்கு அரசு வழங்கும் நிதி வாயிலாகவே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
பொங்கலின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அவர்களுடன் பேச அரசு தயாராக உள்ளது. பொங்கல் பண்டிகை சமயத்தில், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
ஓய்வூதியர்கள் அகவிலைப்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து வழங்கப்படவில்லை. அப்போதெல்லாம் கேட்காத தொழிற்சங்கத்தினர், இப்போது கேட்பதற்கு உள்நோக்கம் உள்ளது.
பொங்கல் பண்டிகையின் போது, தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பயணியருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு சிவசங்கர் கூறினார்.