27 ஆண்டு தலைமறைவு குற்றவாளி வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸ்
27 ஆண்டு தலைமறைவு குற்றவாளி வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸ்
27 ஆண்டு தலைமறைவு குற்றவாளி வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸ்

கோவை: ரயில் நிலையங்களில், வெடிகுண்டு வெடித்த வழக்கில், 27 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள குற்றவாளி, நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நோட்டீஸை, போலீசார் நேற்று கோவையில் உள்ள அவரது வீட்டில் ஒட்டினர்.
1992ம் ஆண்டு, டிச., 6ல் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தது. அன்றைய தினம் திருச்சி ரயில் நிலையத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில் நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ், திருச்சூர் ரயில் நிலையத்தில் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில், வெடிகுண்டுகள் வெடித்தன. திருச்சி, ஈரோடு மற்றும் திருச்சூர் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
இவ்வழக்குகளில் கோவை செல்வபுரம், கல்லாமேடு பகுதியை சேர்ந்த அஸ்ரப் அலி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து, அவர் தலைமறைவானார். வழக்கு விசாரணை, திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சம்பவம் நடந்து, 27 ஆண்டுகளாகி விட்டன. கோவையை சேர்ந்த அஸ்ரப் அலி, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, தலைமறைவாக இருக்கிறார்.
இந்நிலையில், 'வரும், ஜூலை, 17ல் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி, அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆஜராக தவறினால், விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவு நோட்டீசை, கோவை செல்வபுரம், கல்லாமேடு பகுதியில் உள்ள அஸ்ரப் அலி வீட்டில், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், நேற்று ஒட்டினர்.