ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல; தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் வெளிப்படை!
ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல; தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் வெளிப்படை!
ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல; தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் வெளிப்படை!

ஜெருசலேம்: ஈரானில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டனர். ''இஸ்ரேலின் தாக்குதல் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது.
இதனால் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டனர். 320க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர் என ஈரானின் ஐ.நா., தூதர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: தீய மற்றும் அடக்குமுறை ஆட்சியிலிருந்து உங்கள் விடுதலைக்காக எழுந்து நின்று, மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கடந்த 24 மணி நேரத்தில், உயர் ராணுவ தளபதிகள், மூத்த அணு விஞ்ஞானிகள், அணு ஆயுத உற்பத்தி மையங்கள் உள்ளிட்டவற்றை அழித்துள்ளோம். நேற்றும், இதற்கு முன்பும் பல முறை நான் கூறியது போல், இஸ்ரேலின் போராட்டம் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல. எங்கள் போராட்டம் உங்களை ஒடுக்கி வறுமையில் ஆழ்த்தும் ஆட்சிக்கு எதிரானது.
ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும். வரலாற்றின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றான ஆபரேஷன் ரைசிங் லயனின் நடுவில் நாங்கள் இருக்கிறோம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உங்களை ஒடுக்கி வரும் ஆட்சி, இஸ்ரேல் அரசை அழிக்க அச்சுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உதவி எண்கள் அறிவிப்பு
ஈரானில் போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ஈரான் வாழ் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. '' ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின்
+98 9128109115, +98 9128109109 என்ற அவசர எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.