Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தில் 10 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற திட்டம்

தமிழகத்தில் 10 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற திட்டம்

தமிழகத்தில் 10 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற திட்டம்

தமிழகத்தில் 10 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற திட்டம்

UPDATED : ஜூன் 25, 2025 10:24 AMADDED : ஜூன் 25, 2025 12:06 AM


Google News
Latest Tamil News
சென்னை:சென்னை மெரினா உட்பட 10 கடற்கரைகளில், நீலக்கொடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.

உலகின் பல்வேறு கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை, கடற்கரை துாய்மை, அங்கு வரும் சுற்றுலா பயணியருக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து, டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை, சிறந்த கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கோபுரம்


இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரை பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் நடைபாதை, சைக்கிள் தடங்கள், விளையாட்டு பகுதி, கண்காணிப்பு கோபுரம், திறந்தவெளி உடற்பயிற்சி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல, ராமநாதபுரம் அரியமான் கடற்கரை, நாகப்பட்டினம் காமேஸ்வரம் கடற்கரை, கடலுார் சில்வர் கடற்கரை ஆகிய நான்கு கடற்கரைகளுக்கும், நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

வருகை அதிகரிக்கும்


இதுகுறித்து, சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு கூறியதாவது:

நீலக்கொடி சான்றிதழ் சர்வதேச அளவிலானது என்பதால், இச்சான்றிதழ் பெறும் கடற்கரை பகுதிக்கு, சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதுடன், சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும். இதனால், உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

எனவே, தமிழகத்தில், 10 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறப்பட உள்ளது. முதற்கட்டமாக நான்கு கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிக்கப்பட்டு, ஆக., மாதத்தில் மக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

மேலும், ஆறு கடற்கரைகள், 24 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, நீலக்கொடி சான்றிதழ் பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Image 1435176

ரூ.24 கோடியில் திட்டமிடப்பட்ட கடற்கரைகள்

* திருவான்மியூர் கடற்கரை, சென்னை
* பாலவாக்கம் கடற்கரை, சென்னை
* உத்தண்டி கடற்கரை, சென்னை
* கீழ்புதுப்பட்டு கடற்கரை, விழுப்புரம்
* சாமியார்பேட்டை கடற்கரை, கடலுார்
* குலசேகரப்பட்டினம் கடற்கரை, துாத்துக்குடி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us