'விண்வெளிக்கு மனிதர்களை அடுத்தாண்டு அனுப்ப திட்டம்'
'விண்வெளிக்கு மனிதர்களை அடுத்தாண்டு அனுப்ப திட்டம்'
'விண்வெளிக்கு மனிதர்களை அடுத்தாண்டு அனுப்ப திட்டம்'
ADDED : ஜன 08, 2024 06:00 AM
சென்னை : ''இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இளைஞர்களிடம் தொழில்நுட்ப ஆர்வத்தையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளன,'' என, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், விண்வெளி, பாதுகாப்பு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து அவர் பேசியதாவது:
'சந்திரயான் - 2' தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து, தொழில்நுட்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தோம். அதனால் தான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி அடைய முடிந்தது. உலகிலேயே இந்தியா தான், மிக குறைந்த செலவில் ராக்கெட் அனுப்புகிறது. ஹார்ட்வேர் பயன்பாட்டை குறைப்பதே இதற்கு காரணம்.
'சந்திரயான் - ௩' வெற்றி, இந்திய மக்களின் இதயங்களில் உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது. பிரதமர் மோடி கூறியது போல, சந்திரயான் - ௩ வெற்றி அனைவருக்குமானது.
இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இந்திய இளைஞர்களை தொழில்நுட்பம் நோக்கி திருப்பியுள்ளன.
குறிப்பாக, சந்திரயான் வெற்றிக்குப் பின், விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகளை படிக்க, இளைஞர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கல்வித்துறையில் மட்டுமல்லாது, ஏராளமான தொழில் வாய்ப்புகளையும் இஸ்ரோவின் வெற்றி உருவாக்கியுள்ளது. விண்வெளி துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான சூழலை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலம், 2025ல் அனுப்பப்படும். இத்திட்டத்தில் மனித ரோபோ அனுப்பும், 'வியோமித்ரா' திட்டமும் அடங்கும்.
குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இடம், சிறிய வகை ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப பொருத்தமானதாக இருக்கும்.
அடிக்கல் நாட்டப்பட்டதும், இரண்டு ஆண்டுகளில் அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.