அதிமுக.,வை மக்கள் நிராகரித்து விட்டனர்: அண்ணாமலை பதிலடி
அதிமுக.,வை மக்கள் நிராகரித்து விட்டனர்: அண்ணாமலை பதிலடி
அதிமுக.,வை மக்கள் நிராகரித்து விட்டனர்: அண்ணாமலை பதிலடி
UPDATED : ஜூன் 06, 2024 04:03 PM
ADDED : ஜூன் 06, 2024 03:44 PM

கோவை: தேர்தல் முடிவுகள் மூலம் அதிமுக.,வை மக்கள் நிராகரித்துவிட்டனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறுகையில், அதிமுக.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகம் பேசி உள்ளதாக அண்ணாமலை கூறுகிறார். அதிகம் பேசியதே அவர் தான். அண்ணாதுரை, ஜெயலலிதா, இபிஎஸ் பற்றி பேசினார். அதிமுக., பாஜ., கூட்டணி முறிய அண்ணாமலை தான் காரணம். கூட்டணி முறிவு இல்லை என்றால், இப்போது 30 - 35 இடங்கள் கிடைத்து இருக்கும். பா.ஜ.,வினர் கடந்த தேர்தலில் வாங்கியதை விட அண்ணாமலை குறைவாக தான் ஓட்டு வாங்கி உள்ளார். இவ்வாறு வேலுமணி கூறினார்.
இதற்கு பதிலளித்து கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தனியாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதவர்கள், கூட்டணியில் இருந்தால் 30 -35 இடங்களில் வெற்றி பெறலாம் என எப்படி சொல்கின்றனர். வேலுமணியின் பேட்டியை பார்க்கும் போது, அவருக்கும், இபிஎஸ்.,க்கும் இடையே பிரச்னை உள்ளது போல் தெரிகிறது. கூட்டணி முறிந்த போது பல காரணங்களை கூறினர். தற்போது அவர்கள் பேசுவதை பார்க்கும் போது, உட்கட்சி பிரச்னை இருப்பதை காட்டுகிறது.
அதிமுக., ஆளுங்கட்சியாக இருந்த போது வெற்றி பெறவில்லை. அதிமுக., தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் அரசியல் வேண்டாம் என மக்கள் முடிவு செய்துள்ளனர். கூட்டணியில் உள்ள போது ஒரு பேச்சு. இல்லாத போது ஒரு பேச்சு பேசுகின்றனர். கோவையில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் வைத்துள்ள அக்கட்சி, 3 சட்டசபை தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இதற்கு முன்பு இங்கு அக்கட்சி டெபாசிட் இழந்தது இல்லை. கோவை மக்கள் அதிமுக.,வை நிராகரித்துவிட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் வேலுமணி போன்றவர்கள் பேசுகின்றனர்.
வாய் பேசாத ஆட்டை நடுரோட்டில் வெட்டி அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் திமுக.,வினர் வெளியிடுகின்றனர். அவர்களுக்கு என் மீது கோபம் இருந்தால் என் மீது வைக்கட்டும். வாய் பேசாத ஆடு மீது கை வைக்காதீர்கள். 10 ஆண்டுகளாக அதிமுக., ஊழலை மக்கள் பார்த்துள்ளனர். அதனை எடுத்து காட்டுவது என் கடமை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.