உணவு பாதுகாப்புத்துறைக்கு 'ரிட்டர்ன்' தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்
உணவு பாதுகாப்புத்துறைக்கு 'ரிட்டர்ன்' தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்
உணவு பாதுகாப்புத்துறைக்கு 'ரிட்டர்ன்' தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்

மதுரை : உணவு பாதுகாப்புத் துறைக்கு 'ரிட்டர்ன்' தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை லைசென்ஸ் எடுப்பதற்கு பதிலாக 11 மாதங்களுக்கு ஒரு முறை அபராதத்துடன் லைசென்ஸ் தரும் நடைமுறையை மாற்ற வேண்டும் என உணவுத் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மத்திய அரசை வலியுறுத்துகின்றனர்.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெருவோர உணவகங்கள், சிறிய விற்பனையாளர்களுக்கு ஆண்டு பதிவு கட்டணம் ரூ.100 எனவும் உணவுப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு ரூ.2000, தயாரிப்பாளர்களுக்கு ரூ.3000, ஏற்றுமதி செய்பவர்களுக்கு ரூ.7500 என லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை லைசென்ஸ் புதுப்பித்தால் போதும் என்றிருந்ததை தற்போது ஆண்டுதோறும் புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை என்றாலும் 11 வது மாதத்திலேயே கட்டணம் செலுத்தி புதுப்பிக்காவிட்டால் தினமும் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் தொழில்துறையில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது என்கிறார் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன்.
மதுரையில் அவர் கூறியதாவது:.
உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஏற்கனவே வருமான வரி, விற்பனை வரி கணக்கு தாக்கல் செய்கிறோம். தற்போது உணவு பாதுகாப்புத்துறைக்கும் 'ரிட்டர்ன்' தாக்கல் செய்ய வேண்டும் என்ற புதிய விதி இயற்றப்பட்டுள்ளது. இதை செய்யத் தவறினால் ரூ.35 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சத்திற்கு மேல் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
குடிசைத்தொழில் செய்யும் அப்பள தயாரிப்பாளர்களுக்குக்கூட கடுமையான அபராதம் விதிக்கப்படுவதால் தொழிலை விட்டு வெளியேறுகின்றனர். ஒரே ஜி.எஸ்.டி.,யில் நிறைய பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அபராதம் செலுத்த முடியாமல் தொழிலை கைவிடவும் முடியாமல் தவிக்கின்றனர்.
எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது என்று அதிகாரிகளுக்கு கூட தெரியவில்லை. இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் உணவுப்பொருள் உற்பத்தி குறைந்துவிடும். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க நினைத்தால் இந்த விதியை மத்திய அரசு திருத்த வேண்டும். இல்லாவிட்டால் 2026ம் ஆண்டில் இருந்து அமல்படுத்த வேண்டும். இதுவரை விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை முற்றிலும் நீக்க வேண்டும்.
ஆண்டுதோறும் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கு பதிலாக இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்ற வேண்டும். ஓராண்டு லைசென்ஸ் என்ற பெயரில் 11வது மாதத்திலேயே புதுப்பிக்காவிட்டால் அபராதம் விதிப்பதையும் கைவிடவேண்டும் என்றார்.