பி.சி.ஆர்., சட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை
பி.சி.ஆர்., சட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை
பி.சி.ஆர்., சட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை
ADDED : ஜூலை 11, 2024 06:28 AM

மீஞ்சூர் : 'பி.சி.ஆர்., சட்டத்தை தவறாக பயன்படுத்தினால், பட்டியல் சமுதாய மக்களை திரட்டி பா.ஜ., போராடும்' என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு உள்ளது. பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என, திருமாவளவன், காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
அப்படி என்றால் கொலையாளிகளை அவர்களுக்கு தெரியும் என அர்த்தம். காவல் துறை அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை செய்ய வேண்டும்.
காங்., தலைவர் செல்வபெருந்தகை குற்றப்பின்னணி உள்ளவர் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அதைதான் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிடுகிறார். இதற்காக அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் எனப்படும், பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவேன் என செல்வபெருந்தகை மிரட்டுகிறார்.
ஒருவர் மீது பி.சி.ஆர்., சட்டத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் ஜாதியை குறிப் பிட்டு இழிவுப்படுத்தியிருக்க வேண்டும். செல்வப்பெருந்தகையின் குற்றப்பின்னணி குறித்தே அண்ணாமலை,பேசி உள்ளார்.
அண்ணாமலை மீது பி.சி.ஆர்., சட்டத்தை பயன்படுத்துவேன் என்பது, அந்தசட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகும். பி.சி.ஆர்., சட்டத்தை தவறாக பயன்படுத்தினால், பட்டியல் சமுதாய மக்களை திரட்டி பா.ஜ., போராடும். இவ்வாறு அவர் கூறினார்.