Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தங்கம், வெள்ளி விலைப்பட்டியல் போல் கொலை பட்டியல் வெளியிடும் சூழல்; தி.மு.க., மீது பழனிசாமி பாய்ச்சல்

தங்கம், வெள்ளி விலைப்பட்டியல் போல் கொலை பட்டியல் வெளியிடும் சூழல்; தி.மு.க., மீது பழனிசாமி பாய்ச்சல்

தங்கம், வெள்ளி விலைப்பட்டியல் போல் கொலை பட்டியல் வெளியிடும் சூழல்; தி.மு.க., மீது பழனிசாமி பாய்ச்சல்

தங்கம், வெள்ளி விலைப்பட்டியல் போல் கொலை பட்டியல் வெளியிடும் சூழல்; தி.மு.க., மீது பழனிசாமி பாய்ச்சல்

UPDATED : செப் 04, 2025 05:51 AMADDED : செப் 04, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
மதுரை: தங்கம், வெள்ளி நிலவரம் குறித்த விலைப் பட்டியல் வெளியிடுவது போல் தற்போது கொலைகள் எண்ணிக்கை பட்டியல் வெளியிடும் சூழலில் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது என மதுரையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தில் மதுரையில் மூன்றாவது நாளான நேற்று இரவு மேற்கு சட்டசபை தொகுதி பழங்காநத்தத்தில் அவர் பேசியதாவது:

Image 1464700

மதுரை எப்போதுமே அ.தி.மு.க.,வின் எக்கு கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து தி.மு.க., சில தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். இந்த நான்காண்டுகளில் தி.மு.க., ஆட்சியால் மக்கள் பட்ட துன்பங்கள் அதிகம். அதற்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தங்கம், வெள்ளி நிலவரம் குறித்து தினமும் நாளிதழ்களில் விலைப் பட்டியல் வெளியாவது போல் தமிழகத்தில் நடந்த கொலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. போதை கலாசாரம் தலை துாக்கியுள்ளது.

இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது. போதை மாநிலமாகவே மாறிவிட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த முதலில் போதை கலாசாரத்திற்கு முடிவு கட்டப்படும்.

சொத்துவரி ஊழல் தி.மு.க., ஆட்சியில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை. இதற்கு ஒரு உதாரணம் தான் மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.200 கோடி சொத்துவரி ஊழல். தி.மு.க.,வின் 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேயரின் கணவர் கண்துடைப்புக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டுக்கு முழு பொறுப்பு மேயர், கமிஷனர் தான். ஆனால் ஊழல் செய்தவர்களை இந்த அரசு காப்பாற்றுகிறது.

அடிப்படை வசதிகளுக்காக ரூ.250 கோடி மாநகராட்சி கடன் வாங்கியுள்ளது. வரி விதிப்பு என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறது. மாநகராட்சி ஊழல் மதுரை மட்டுமல்ல பல மாநகராட்சிகளில் நடந்துள்ளது. ஊழல் பணத்தை யார் பங்கு போட்டுக்கொள்கின்றனர்.

டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இத்தனை பணமும் எங்கே போகிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்.

ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொழில்முதலீடுகளை ஈர்க்கப்போகிறேன் என முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பறந்துவிட்டார்.

அவர் அங்கு செல்வது தொழில்முதலீடுகளை ஈர்க்க அல்ல; ஊழல் மூலம் கிடைத்த பணத்தை முதலீடு செய்யவே. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தான் தி.மு.க.,. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

கட்டுமானப் பொருட்கள் உயர்வு


அ.தி.மு.க., ஆட்சியில் எம் சாண்ட் ரூ.3500க்கு விற்றது தற்போது ரூ.5 ஆயிரமாக உயர்த்துள்ளது. ரூ.2 ஆயிரமாக இருந்த ஜல்லி விலை தற்போது ரூ.4500 ஆகவும், ரூ.240க்கு விற்ற சிமென்ட் விலை தற்போது ரூ.350 என கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் தத்தளிக்கின்றனர்.

மதுரைக்கு திட்டங்கள்


அ.தி.மு.க., ஆட்சியில் தான் மதுரை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அவற்றில் பல திட்டங்களை தி.மு.க., கொண்டுவந்தது போல் காட்டிக்கொள்கிறது.

முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. கருணாநிதிக்கு நுாற்றாண்டு நினைவு நுாலகம் கட்டியது தான் தி.மு.க.,வின் ஒரே சாதனை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம், ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம், மீண்டும் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும். இவ்வாறு பேசினார்.

முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர் சோலை ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us