நெல் கொள்முதல் பணி விரைவில் முழு கணினிமயம்
நெல் கொள்முதல் பணி விரைவில் முழு கணினிமயம்
நெல் கொள்முதல் பணி விரைவில் முழு கணினிமயம்
ADDED : பிப் 10, 2024 06:25 PM
சென்னை:மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
நெல் வழங்கும் விவசாயிகளுக்கு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். சில இடங்களில், விவசாயிகள் போல வியாபாரிகளே நெல்லை வழங்குகின்றனர். இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். மேலும், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. அப்படியும் முறைகேடு நடக்கிறது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நெல் கொள்முதல் நிலையங்களில், விற்பனை முனைய கருவியில் விவசாயிகளின் விரல் ரேகை பதிவு, அதற்கான மென்பொருள் போன்றவற்றை ஒப்பந்த நிறுவனம் பராமரிக்கிறது. அதன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, முழு கணினிமய பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
அப்போது, விவசாயிகள் தான் என்பதை உறுதி செய்ய, விழிரேகையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, நெல் வழங்கிய நாளுக்கு அடுத்த நாள், விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இனி, கணினிமய ஆதார் உறுதிப்படுத்துதல் வாயிலாக, உடனுக்குடன் வங்கியில் செலுத்தப்படும். இதேபோல, வேறு சில புதிய தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.