சந்தர்ப்பவாதிகள் பா.ஜ.,வில் இல்லை தி.மு.க.,வுக்கு நாகேந்திரன் குட்டு
சந்தர்ப்பவாதிகள் பா.ஜ.,வில் இல்லை தி.மு.க.,வுக்கு நாகேந்திரன் குட்டு
சந்தர்ப்பவாதிகள் பா.ஜ.,வில் இல்லை தி.மு.க.,வுக்கு நாகேந்திரன் குட்டு
ADDED : ஜூன் 26, 2025 12:39 AM
சென்னை:''எங்கள் கூட்டணி உறுதியானது. கூட்டணியை உடைக்க நினைக்கும் முயற்சி நடக்காது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மிசா தியாகிகளின் பொன் விழா ஆண்டு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள, கமலாலயத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
மிசாவில் முதல்வர் ஸ்டாலினும் பாதிக்கப்பட்டவர் என்பதால், மிசாவில் பாதிக்கப்பட்டவர்களை, அவர் தான் கவுரவித்திருக்க வேண்டும். 'சமையல் காஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்போம்' என்ற தேர்தல் வாக்குறுதியை, ஸ்டாலின் நிறைவேற்றாமல் உள்ளார். டீசல் விலையை மட்டும் சற்று குறைத்தனர்.
பா.ஜ., கூட்டணி உறுதியானது; இறுதியானது. அதை உடைக்க நினைக்கும் முயற்சி நடக்காது. பா.ஜ., கூட்டணியை சிதைக்க வேண்டும் என்பதில், தி.மு.க., கண்ணும் கருத்தாக உள்ளது. இது, நடக்காது. தமிழ் பண்பாடு, கலாசாரம் பற்றி பேசும் ஸ்டாலின், தகாத வார்த்தையால் பேச, ஆ.ராஜாவை அனுமதிக்கக்கூடாது. இது தொடர்ந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும்.
ஒரு கட்சி வெற்றி பெறப்போகிறது என்றால், அதன் பக்கம் எல்லோரும் வருவர். அந்த வகையில் தான், பா.ஜ.,வில் புதிதாக சேர பலரும் வருகின்றனர். அனைவரையும் வரவேற்கிறோம். ஹிந்து மதத்தில் ஜாதிய பாகுபாடுகள் கிடையாது. ஹிந்து மதம் என்பது உறவுகளை உள்ளடக்கிய வாழ்வியல் முறை. தி.மு.க.,வினரைப் போல, ஒரு சமூகத்திற்கு சார்பாகவும், மற்றொரு சமூகத்திற்கு எதிராகவும் பேசி, சந்தர்ப்பத்தை பயன்படுத்தும், சந்தர்ப்பவாதிகள் பா.ஜ.,வில் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.