/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில்வே கேட் சுரங்கப்பால திட்டம் கைவிடப்பட்டதால் ஆர்ப்பாட்டம் ரயில்வே கேட் சுரங்கப்பால திட்டம் கைவிடப்பட்டதால் ஆர்ப்பாட்டம்
ரயில்வே கேட் சுரங்கப்பால திட்டம் கைவிடப்பட்டதால் ஆர்ப்பாட்டம்
ரயில்வே கேட் சுரங்கப்பால திட்டம் கைவிடப்பட்டதால் ஆர்ப்பாட்டம்
ரயில்வே கேட் சுரங்கப்பால திட்டம் கைவிடப்பட்டதால் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2025 12:39 AM
குரோம்பேட்டை, குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லுாரி ரயில்வே கேட்டில், சுரங்கப்பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை கண்டித்து, குடியிருப்போர் நலச்சங்கத்தினர், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லுாரி ரயில்வே கேட் பகுதியை, ராதா நகர், நன்மங்கலம், பாரதிபுரம் உட்பட, 25க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த, 2 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில், கனரக வாகன சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கடந்த 2014ல், 60 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, ரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நிதியின்மை காரணமாக ஒப்புதல் கிடைக்கவில்லை. அதனால், நகரும் படிகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கனரக வாகன சுரங்கப்பாலம் அமைப்பது மட்டுமே தீர்வு என வலியுறுத்தியும், தாம்பரம் மாநகராட்சி 2, 3வது மண்டல குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், கடந்த ஆண்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இந்த ரயில்வே கேட்டில் சுரங்கப்பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, நெடுஞ்சாலைத் துறை பதில் அனுப்பியது.
அதனால், நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், சுரங்கப்பாலம் அமைக்க வலியுறுத்தியும், குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையத்தினர், பல்லாவரம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.