அரசின் சேவைகளை பெற ஆன்லைனில் மனு விசாரிக்காமல் நிராகரிக்கக்கூடாது: ஐகோர்ட்
அரசின் சேவைகளை பெற ஆன்லைனில் மனு விசாரிக்காமல் நிராகரிக்கக்கூடாது: ஐகோர்ட்
அரசின் சேவைகளை பெற ஆன்லைனில் மனு விசாரிக்காமல் நிராகரிக்கக்கூடாது: ஐகோர்ட்
ADDED : மார் 20, 2025 05:04 AM

மதுரை : 'அரசின் சேவைகளை பெற ஆன்லைனில் மக்கள் விண்ணப்பித்தால் விசாரிக்காமல், ஆவணங்கள் இல்லை என கூறி நிராகரிக்கக்கூடாது. வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் முத்துலிங்காபுரம் கோமதி தாக்கல் செய்த மனு:
கீழராஜகுலராமன் அருகே அரசியார்பட்டியிலுள்ள எனது நிலத்திற்கு பட்டா கோரி ராஜபாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். நிராகரித்தார். அதை ரத்து செய்து பட்டா வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: ஆவணங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு போதிய வாய்ப்பளிக்கவில்லை. காரணங்கள் எதுவுமின்றி நிராகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர்: ஆன்லைன் இணையதளத்தில் உத்தரவின் இறுதி பகுதி மட்டுமே கிடைக்கும். பாதிக்கப்பட்ட தரப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகினால், விரிவான உத்தரவு வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: டிஜிட்டல் தளத்தில் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கும் நடைமுறையை ஒரு வழக்கில் இந்நீதிமன்றம் நிராகரித்தது. அந்த உத்தரவில், 'இ-மாவட்ட திட்டம் தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் ஒரு பகுதி.
இது அரசின் சேவைகளை பெற வெளிப்படைத் தன்மையுடன் எளிதில் அணுக வழிவகுக்கிறது. சாதாரண குடிமகனின் கோரிக்கை நிராகரிக்கப்படும்போது, அதற்கான காரணங்களை அறிய உரிமை உண்டு' என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பின், கூடுதல் ஆவணங்கள் தேவை என அதிகாரிகள் கருதினால், அவற்றை சமர்ப்பிக்குமாறு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். ஆவணங்கள் இல்லை என்ற காரணத்திற்காக விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது.
அதிகாரிகளுக்கு விபரங்கள் தேவைப்பட்டால் சந்தேகத்தை தெளிவுபடுத்த மனுதாரருக்கு வாய்ப்பு வழங்கலாம். கோரிக்கை நிராகரிக்கப்படும்பட்சத்தில் காரணங்களை உத்தரவில் குறிப்பிட வேண்டும் என வழிகாட்டுதல்களை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இவ்வழக்கில் மனுதாரருக்கு வாய்ப்பளிக்கவில்லை. முந்தைய நடைமுறையை அதிகாரிகள் தொடர்ந்து பின்பற்றுகின்றனர். வழிகாட்டுதல் மீறப்பட்டுள்ளது. நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மறுபரிசீலனைக்காக இம்மனு தாசில்தாருக்கு அனுப்பப்படுகிறது. ஆவணங்களை வழங்க மனுதாரருக்கு அவகாசம் அளித்து, விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் மக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதெல்லாம், இந்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டுதல்களை அதிகாரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவின் நகலை அனைத்து கலெக்டர்களுக்கும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்களை கையாளும் போது நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.