ADDED : ஜூன் 05, 2025 10:33 PM

ஜூன் 6, 1908
மதுரை மாவட்டம், பேரையூரில், பி.எஸ்.பொன்னாயிரம் பிள்ளை - முத்தம்மாள் தம்பதியின் மகனாக, 1908ல், இதே நாளில் பிறந்தவர் பி.எஸ்.பி.பொன்னுசாமி.
இவர், சிறுவனாக இருந்தபோது, மதுரையில் மஹாத்மா காந்தியை சந்தித்தார். பின், விடுதலை போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டார். துவக்கத்தில், அரவிந்தரை பின்பற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார். ஸ்ரீவில்லிப்புத்துார் அருகில் ரயில் கவிழ்ப்பு சதி, தந்திக்கம்பிகள் அறுப்பு, கள்ளுக்கடைகளுக்கு தீ வைப்பு உள்ளிட்டவற்றில் இவர் ஈடுபட்டதை கண்டறிந்த போலீசார், இவரிடம் இருந்த, 13 துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், ஒரு டைப்ரைட்டரை கைப்பற்றினர்.
இவரை, ஊர் மத்தியில் அடித்து கைது செய்தபோது, இவரின் நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது. சட்ட மறுப்பு, வெள்ளையனே வெளியேறு போராட்டங்களிலும் பங்கேற்று சிறையில் செக்கிழுத்தார். சுதந்திரத்துக்குப் பின் ஹரிஜன சேவை, கதர், கூட்டுறவு இயக்க செயல்பாடுகளிலும், கோவில் திருப்பணிகளிலும் ஈடுபட்டார்.
பிரதமர் இந்திராவிடம் தாமிர பட்டயம், முதல்வர் ஜெயலலிதாவிடம் கேடயம் பெற்ற இவர், தன் 90வது வயதில், 1998, ஜனவரி 29ல் காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!