ADDED : ஜன 19, 2024 09:57 PM

ஜனவரி 20, 1859
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் கிராமத்தில், தேவசகாயம் - ஞானப்பிரகாசி தம்பதிக்கு மகனாக, 1859ல் இதே நாளில் பிறந்தவர் சவரிராயர்.
இவர், கொப்பன்பட்டியைச் சேர்ந்த, தமிழ்ப் புலவர் செபாஸ்டியன் பிள்ளையிடம் தமிழையும், சமஸ்கிருதத்தையும் கற்றார். கொல்லத்தில் இருந்த குருமடத்தில் லத்தீன் மொழி கற்றார். துாத்துக்குடி துாய சவேரியார் துவக்கப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றினார்; பின், உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
திருச்சி துாய சூசையப்பர் கல்லுாரியில் தமிழ் விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும், 20 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, 'இந்திய நாடு, திராவிட இந்தியா, தமிழ் மன்னர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள தொடர்பு, பரத வம்சம்' உள்ளிட்ட தலைப்புகளில், ஆய்வு கட்டுரைகளை எழுதினார்.
திருச்சி நகரசபை உறுப்பினராக இரண்டு முறை பொறுப்பு வகித்த இவர், விவசாயிகளுக்காக கூட்டுறவு வங்கியையும் நிறுவினார். 1923, ஆகஸ்ட் 24ல், தன் 64வது வயதில் மறைந்தார்.
தமிழ் வரலாற்று ஆய்வாளர் பண்டிதர் சவரிராயர் பிறந்த தினம் இன்று!


