ADDED : ஜன 18, 2024 10:32 PM

ஜனவரி 19, 1855
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், கணபதி அய்யர் - தர்மாம்பாள் தம்பதிக்கு மகனாக, 1855ல் இதே நாளில் பிறந்தவர் ஜி.கணபதி அய்யர்.
திருவையாறிலும், தஞ்சையிலும் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னையில் ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.ஏ., படித்து, திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரானார்.
பிரிட்டிஷ் அரசு, முத்துசாமி அய்யரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது. அதை, பிரிட்டிஷாரால் நடத்தப்பட்ட பல இதழ்கள், 'கருப்பரை நீதிபதியாக்கினால் சமூகநீதி கெடும்' என விமர்சனம் செய்தன. இந்த விமர்சனத்தை கண்டிக்க, தன் நண்பர்களுடன் இணைந்து, 'தி ஹிந்து' என்ற ஆங்கில பத்திரிகையை துவக்கினார்.
தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காக, 'சுதேச மித்ரன்' என்ற முதல் அரசியல் பத்திரிகையை துவக்கினார்; பாரதியார் உள்ளிட்ட தேச பற்றாளர்கள் இதில் பணியாற்றினர். இளம் வயதில் விதவையான தன் மகளுக்கு மறுமணம் செய்து புரட்சியாளர் ஆனார். 1916, ஏப்ரல் 18ல், தன் 61வது வயதில் மறைந்தார்.
காந்தியை, 'மகாத்மா' என, எழுதிய முதல் சுதந்திர இதழாளர் பிறந்த தினம் இன்று!


