ADDED : ஜன 02, 2024 10:49 PM

ஜனவரி 3, 1930
கோவை மாவட்டம், இடிகரை எனும் கிராமத்தில், சுப்பிரமணிய முதலியார் - பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாக, 1930ல், இதே நாளில் பிறந்தவர் ஐ.எஸ்.முருகேசன் எனும் மீசை முருகேசன்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவில், தவில் வாசிப்பாளராக இருந்தார். மோர்சிங், கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி உள்ளிட்ட இசை கருவிகளை உருவாக்கி, 'அபூர்வ தாள வாத்தியங்கள்' என, பெயரிட்டார்; இவற்றை பல நாடுகளுக்கு சென்று வாசித்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், இளையராஜா உள்ளிட்டோரின் இசைக் குழுக்களிலும் பணியாற்றினார். 'சுகமான ராகங்கள்' என்ற படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். மோகன், நதியா நடித்த, 'உயிரே உனக்காக' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
இவரது வித்தியாசமான மீசையே இவரின் அடையாளமாகி, 'மீசை முருகேசன்' என்ற பெயரில் பிரபலமானார். 'ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, பூவே உனக்காக' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்தார். 'கலைமாமணி' விருது பெற்ற இவர், 2014, நவம்பர் 8ல் தன், 84வது வயதில் மறைந்தார்.
தமிழகத்தின் அபூர்வ இசைக்கலைஞர் பிறந்த தினம் இன்று!