சட்டவிரோத கும்பலுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு: லஞ்ச ஒழிப்பு போலீசில் கான்ஸ்டபிள் புகார்
சட்டவிரோத கும்பலுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு: லஞ்ச ஒழிப்பு போலீசில் கான்ஸ்டபிள் புகார்
சட்டவிரோத கும்பலுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு: லஞ்ச ஒழிப்பு போலீசில் கான்ஸ்டபிள் புகார்
ADDED : ஜன 08, 2025 05:45 AM

சென்னை : 'மணல் கடத்தல், போலி மது, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் சட்ட விரோத கும்பல்களுடன் கைகோர்த்துள்ள போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர், மாநில லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சரகம், ஊத்துமலை போலீஸ் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சைலஸ். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்.
இவர், 'தென்காசி மாவட்டத்தில், மணல் கடத்தல், போலி மது பாட்டில்கள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, பாலியல் தொழில் நடத்தும் சட்ட விரோத கும்பல்களுடன் கைகோர்த்துள்ள போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக, 'வீடியோ' பதிவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2003ல், தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டேன். தற்போது, ஊத்துமலை போலீஸ் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணிபுரிகிறேன்.
தவறு செய்வோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், என் போன்றோர் காவல் துறையில் சேருகின்றனர். ஆனால், நடைமுறையில் அப்படியே தலைகீழாக உள்ளது. என்னால் போலீஸ் அதிகாரிகள் செய்யும் தவறுகளை, பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
யார் தவறு செய்தாலும், உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பேன். போலீஸ் அதிகாரிகள், சட்ட விரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள், என்னிடம் உள்ளன. தவறு செய்யும் அதிகாரிகள் குறித்து அம்பலப்படுத்துவதால், மிகுந்த மன உளைச்சலுக்கும், துறை ரீதியான தண்டனைகளுக்கும் ஆளாகி இருக்கிறேன். இதற்கு முன், சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தேன்.
அங்கு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர், 22 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை ஆதாரங்களுடன் அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன்; நடவடிக்கை இல்லை. ஆனால், நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். மணல் கடத்தல், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு, மது பாட்டில் விற்பனையை அனுமதிப்பது, போக்சோ சட்டத்தில் கைதாக வேண்டிய நபர்களை விடுவிப்பது, பாலியல் தொழில் செய்ய நடத்தப்படும், 'ஸ்பா'க்களில் மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில், அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் குறித்து, டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு, புகார் மனு அனுப்பி உள்ளேன். தவறுகளை சுட்டிக்காட்டினால், புகார் அளித்த போலீசார் மீதே நடவடிக்கை எடுக்கும் மனப்பான்மை தான் அதிகாரிகளிடம் உள்ளது. இதனால், விருப்ப ஓய்வு பெறும் மன நிலையில் உள்ளேன்.
யாரிடமாவது, 500, 1000 ரூபாய் லஞ்சம் வாங்கும் கடை நிலை ஊழியர்களை கைது செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சட்ட விரோத கும்பல்களுடன் கை கோர்த்து, கோடிகளை குவித்து வரும் போலீஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.