உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2024 05:18 PM

சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள், எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை, ஆம்ஸ்டிராங் கொலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்டிராங் குடும்பத்தினரை சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., ஆறுதல் கூறினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆம்ஸ்டிராங்கை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். கொலை செய்தவர்கள் சமூகத்தில் எவ்வளவு ஆட்களாக இருந்தாலும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அண்மை காலமாக தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நெல்லையில் காங்., தலைவர், சேலத்தில் அதிமுக நிர்வாகி, சென்னையில் பகுஜன் சமாஜ் தலைவர் கொலை என ஒரு மாதத்தில் அனைத்தும் அரங்கேறி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டு விட்டது. கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும், எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
ஆம்ஸ்டிராங் கொலையில் பல பேர் தொடர்பு உள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என அவரது குடும்பத்தினரும், பகுஜன் சமாஜ் நிர்வாகிகளும் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களின் சந்தேகத்தை போக்க வேண்டியது அரசின் கடமை. இந்த விவகாரத்தை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கைது செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.