'மேகதாது அணையை கட்ட எந்த கொம்பனாலும் முடியாது'
'மேகதாது அணையை கட்ட எந்த கொம்பனாலும் முடியாது'
'மேகதாது அணையை கட்ட எந்த கொம்பனாலும் முடியாது'
ADDED : மார் 25, 2025 01:28 AM

சட்டசபையில் நேற்று, நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தண்ணீரை பெறும் உரிமை, தமிழகத்திற்கு இருக்கிறது. ஆனாலும், அந்த உரிமை மறுக்கப்படுகிறது. அண்டை மாநில முதல்வர்களுடன் இருக்கும் நல்லுறவை பயன்படுத்தி, நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணலாமே என்று, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேட்டார்.
பேசினால் காரியம் கெட்டு விடும். பேசிப்பேசி பார்த்து தான், இனி பேசுவதால் பலனில்லை என்று முடிவுக்கு வந்தோம். அதனால் தான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். நதிநீர் பிரச்னை பற்றி பேச்சு நடத்தினால், 'நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்' என, உச்ச நீதிமன்றம் கூறிவிடும்.
நம் அண்டை மாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் நடந்தவற்றை அறிவோம். அதனால் தான் மிகவும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளுக்காக, 22 வழக்குகள் தொடுத்துள்ளோம். இதற்காக எவ்வளவு கோடி ரூபாய் செலவாகும் என்பதை, அனைவரும் அறிவோம்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது துவங்கப்பட்ட காவிரி -- வைகை -- குண்டாறு இணைப்புத் திட்டத்தை, அ.தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசு நிதி அல்லது வெளிநாட்டு கடனையோ பெற்று, இத்திட்டத்தை அடுத்த ஆண்டு செயல்படுத்துவோம்.
காவிரி மேலாண்மை வாரியம், 26 முறையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழு, 68 முறையும் கூடியுள்ளது. தமிழகத்தின் நிலை பற்றி, இந்த கூட்டங்களில் விளக்கமாக கூறியுள்ளோம். மேகதாது அணை கட்டுவது சுலபமல்ல. முதலில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.
அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பின், மத்திய சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட மத்திய அரசின் துறைகள், தீர்ப்பாயத்தின் அனுமதி பெற வேண்டும். இறுதியில் தமிழகத்தின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, மேகதாது அணையை கட்ட முடியும். எனவே, எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.