அமெரிக்க வரி நெருக்கடியை சமாளிக்க விரைவில் சிறப்பு சலுகை தொகுப்பு நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
அமெரிக்க வரி நெருக்கடியை சமாளிக்க விரைவில் சிறப்பு சலுகை தொகுப்பு நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
அமெரிக்க வரி நெருக்கடியை சமாளிக்க விரைவில் சிறப்பு சலுகை தொகுப்பு நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ADDED : செப் 02, 2025 11:59 PM
சென்னை:''அமெரிக்காவின், 50 சதவீத வரி நெருக்கடியை சமாளிக்க, கொரோனா காலத்தை போல, சிறப்பு சலுகை தொகுப்பு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்க அரசு, 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால், ஏற்றுமதியை நம்பியுள்ள இந்திய தொழில் துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், தமிழக ஜவுளித்துறை சங்கங்களின் பிரதிநிதிகளுடன், சென்னையில் நேற்று நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.
'சைமா' எனப்படும் தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் தலைவர் சுந்தரராமன், 'டெக்ஸ்புரோசில்' எனப்படும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் ரவி சாம், ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் ஏ.சக்திவேல், விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவர் கே.சக்திவேல்.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், ஜவுளி தொழில் சங்கத்தினர் கூறியதாவது:
ஜவுளி தொழில் துறை, 30 சதவீதத்திற்கும் மேல் அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ளது. அமெரிக்காவின், 50 சதவீத வரியால் மிகப்பெரிய நெருக்கடியை, ஜவுளித் துறை எதிர்கொண்டுள்ளது. இது, தற்காலிக நெருக்கடியாக இருக்கும் என்றே நினைக்கிறோம்.
ஆனாலும், ஏற்றுமதிக்கான மாற்று வழிகளுக்கு, மத்திய அரசு திட்டமிட வேண்டும். தொழில் துறையை பாதுகாக்க ஜி.எஸ்.டி., வரி குறைப்பு, அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல், கடன், வட்டி சலுகைகள், கடன் தவணைகள் செலுத்த அவகாசம் அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்து, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு, அமெரிக்கா, 25 சதவீத வரி விதித்த போதே, எப்படி சமாளிப்பது என தத்தளித்துக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில், 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது பெரும் சுமையாகியுள்ளது. எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான பணி, ஏற்கனவே நடந்து வருகிறது. அமெரிக்க வரி விதிப்பு நெருக்கடியில் இருந்து தொழில் துறை மீள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா கால நெருக்கடியின் போது அறிவிக்கப்பட்டதை போல, சிறப்பு சலுகை தொகுப்பு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும், 50 சதவீத வரி நெருக்கடியில் இருக்கும் போது, கடன் தவணைகள், வட்டி செலுத்துதல் போன்றவை தாமதமானால், வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா என்ற அச்சம் உள்ளது. அதற்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜவுளி உற்பத்தி தொழிலில் உள்ள நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன. கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வரும். இதை நான் தைரியமாக சொல்கிறேன்.
ஏற்றுமதி பொருட்களை வேறு எங்காவது மாற்றி அனுப்ப வேண்டுமா அல்லது வேறு என்ன செய்வது என்ற பிரச்னைக்கு தீர்வு காண, அரசின் செயல்முறைகளில் மாற்றங்களை செய்யவும், மத்திய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.