Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?

ADDED : மே 27, 2025 12:27 PM


Google News
Latest Tamil News
கோவை: தங்க நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள், நுகர்வோருக்கு நன்மை தருபவையே என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்க நகைகளை அடகு வைப்பதற்கான, ரிசர்வ் வங்கியின் விதிகளால் மக்கள் பாதிக்கப்படுவர் என, கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், புதிய விதிகள் தங்கத் தொழிலில் நடக்கும் மோசடிகளை தடுக்க உதவும் என, நிபுணர்கள் கூறுகின்றனர். எம்.எம்.டி.சி., பி.ஏ.எம்.பி., அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் கயிலைராஜன் கூறியதாவது: புதிய அறிவிப்பின் வாயிலாக, தங்க நகைக்கடன் தொழிலில், நடக்கும் மோசடிகளை தடுக்க அரசு முற்பட்டுள்ளது.

புதிய விதிகளால், நுகர்வோருக்கு கிடைக்கும் பல நன்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. ஒன்பது விதிகளில், நிர்வாகம் சார்ந்த, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஐந்து விதிகள் தற்போது முறைபடுத்தப்படுகின்றன.

பில் பத்திரம்

வீடு, நிலம், கார், பைக் வாங்கும் போது, உரிமை ஆவணம் வாங்குகிறோம். அதே போல், தங்க நகைக்கான ஒரே ஆதாரமான பில்லை, பத்திரப்படுத்துவது அவசியம். பில் வாங்கினால் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும்; அரசுக்கு வரி கிடைக்கும். தங்க கடத்தல் நிற்கும். ஆதாரமின்றி தங்கம் விற்க முடியாத நிலையில், நகைக்கான கொலை, திருட்டுகள் குறையும். நகை திருட்டு போனால், இன்சூரன்ஸ் பெறலாம்.

தற்போது, நகைகளில் ஹால்மார்க் முத்திரை உடன், வரும் எச்.யு.ஐ.டி., எண் மூலம், மத்திய அரசின் பி.ஐ.எஸ்., இணையதளத்தில் இருந்து அதற்கான சான்றை நுகர்வோர் எப்போது வேண்டுமானாலும் பெறலாம். பழைய தங்கத்துக்கு, சுய சான்று எழுதிக் கொடுத்து கடன் வாங்க சட்டம் இடம் கொடுக்கிறது.

சான்று கட்டாயம்


தற்போது மதிப்பீட்டாளர் அடகு வைக்கும் போது, நகையை பரிசோதித்த பின்னரே கடன் தருகிறார். இருப்பினும், நகையை திருப்பும் போது பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

இதற்கு தீர்வாக, புதிய விதியின் வாயிலாக, நகை அடகு வைக்கும் போது, மதிப்பீட்டாளர், தங்க நகையின் தரம், எடை, நிறம், வடிவம், கல் போன்ற அனைத்தும் அடங்கிய, புகைப்படத்துடன் கூடிய இரு தரச்சான்றுகளை தர வேண்டும்.

ஒன்று உங்களிடமும், மற்றொன்று நகையுடனும் இருக்கும். திருப்பும் போது நகை, தரம் மாறாமல் இருக்கும். யார் மாறினாலும், நகை மாறாது. வங்கி, அடகு கடைகளில் உங்கள் நகையை பயன்படுத்தி செய்யும் மோசடிகளை நிறுத்த முடியும்.

அடகு வைக்கும் போது, இருதரப்பும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் செய்வதால், பணம், வட்டி, திருப்பும் காலம், அபராதம், ஏல காலம், ஏல நடைமுறைகள் ஆகியவை வெளிப்படையாக நுகர்வோருக்கு புரியும்படி இருக்கும்.

அபராதம்


ஏலத்தின் போது, ஏலத் தொகையில் அனைத்து செலவுகள் போக மீதித்தொகை, நுகர்வோரிடம் வழங்கப்படும். தற்போது ஏலத்துக்கு பின் நுகர்வோருக்கு ஒன்றும் கிடைக்காது. பல தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வங்கிகள், அடகு கடைகள் நகை ஏலத்தில் தான் பெரும் லாபம் பெறுகின்றனர். ஏல மோசடி இனி இருக்காது. புதிய விதிப்படி, பணம் செலுத்திய பின், நகையை வழங்காமல், ஏழு நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தினால், தினமும் 5,000 ரூபாய் தர வேண்டும். இவ்வாறு கூறினார்.

குறிப்பு


எம்.எம்.டி.சி., - பி.ஏ.எம்.பி., என்பது மத்திய அரசின் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வர்த்தகக் கழகம் (எம்.எம்.டி.சி.,) மற்றும் சுவிட்சர்லாந்து எஸ்.ஏ., புரோடிட்ஸ் ஆர்டிஸ்டிக்ஸ் மெட்டாக்ஸ் பிரீசியூ (பி.ஏ.எம்.பி.,) ஆகியவை இடையேயான கூட்டு முயற்சியாக துவங்கப்பட்ட நிறுவனம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us