Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அயலக உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிப்பு; இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள்!

அயலக உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிப்பு; இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள்!

அயலக உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிப்பு; இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள்!

அயலக உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிப்பு; இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள்!

ADDED : மே 27, 2025 12:20 PM


Google News
Latest Tamil News
மதுரை: தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பத்தினருக்கு ரூ.36 லட்சம், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் இருந்தால் ரூ.24 லட்சம் வழங்கப்படுகிறது.

இவர்கள் உயர்கல்வியில் வேளாண்மை, மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் என எந்தத் துறையிலும் உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம். 2023ல் துவங்கிய அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆதிதிராவிடர் நலத்துறையும், ஆக்சிஸ் வங்கியும் இணைந்து இதுகுறித்த விழிப்புணர்வுகளை கல்லுாரி மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் ஏற்படுத்தி வருகின்றனர். இதையடுத்து கடந்தாண்டு 171 பேர் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றனர்.

இரட்டிப்பாகும் விண்ணப்பம்

இந்தாண்டு கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில் பிரிட்டனில் படிப்பதற்கே 90 சதவீதம் பேர் விரும்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் கல்லுாரியில் சேர 2 முறை விண்ணப்பிக்கலாம். ஜனவரியில் துவங்கும் படிப்புக்கு செப்டம்பர் முதலும், ஜூலையில் துவங்கும் படிப்புக்கு பிப்ரவரி முதலும் விண்ணப்பிக்கலாம். அவ்வகையில் இந்தாண்டு ஜனவரி முதல் மே வரை 200 விண்ணப்பங்களை தாண்டிவிட்டது.

மதுரை மண்டலத்தில் 42 பேர், டெல்டா மாவட்டங்களில் 40 பேர், வடமாவட்டங்களில் 40 பேர் என தயாராகி வருகின்றனர். இதனால் இந்தாண்டு அயல்நாட்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 400 தாண்டிவிடும் என எதிர்பார்க்கின்றனர். மாநில அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் மோசஸ் ராஜசேகரன் கூறுகையில், ''ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடி இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நல்ல பலன் உள்ளது. மாணவர்கள் இதுபோன்ற அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

மொழித்திறன் தேர்வு


வெளிநாடுகளில் கல்வி கற்க செல்வோர் நுழைவுத் தேர்வு போல ஐலெட்ஸ் (IELDS) என்ற ஆங்கில மொழித்திறன் தேர்வை எழுதுவது அவசியம். பிரிட்டனுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உள்ளது. இதில் தென்மாவட்டத்தினரைத் தவிர, சென்னையை சுற்றியுள்ள பகுதியினரே எளிதில் வெற்றி பெறுகின்றனர். மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் ஆங்கில மொழித்திறனுக்கு, நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us