மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை: சீமான் கண்டனம்
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை: சீமான் கண்டனம்
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை: சீமான் கண்டனம்
UPDATED : ஜூலை 16, 2024 12:21 PM
ADDED : ஜூலை 16, 2024 08:21 AM

மதுரை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணை செயலாளர் ஆக பாலசுப்ரமணியன் இருந்து வந்தார். இவர் இன்று காலை சொக்கிகுளம் அருகே வல்லபாய் சாலை பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். அமைச்சர் தியாகராஜனின் வீட்டருகே கொலை நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் வெடிக்கும் என்கிறார் சீமான்
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியனை படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்கும்.
ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் பாலசுப்பிரமணியனின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது?.
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழகமா? இல்லை. உத்திரப்பிரதேசமா? எங்குப் பார்த்தாலும் வன்முறைத்தாக்குதல்கள், கொலைகள், போதைப்பொருட்களின் புழக்கம், ரவுடிகளின் அட்டூழியம், கூலிப்படைக் கலாசாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழகத்தின் நிலை மோசமாக இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.