Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி

குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி

குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி

குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி

ADDED : ஜூன் 06, 2025 01:52 PM


Google News
Latest Tamil News
சென்னை: ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை பாதியாக குறைத்து வழங்கி ரூ.90 கோடி ஊழலில் ஈடுபட்டது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை; தமிழக குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40% முதல் 50% வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

குடிநீர் வாரியத்தில் மின்னியலாளர்கள் ( எலக்ட்ரீஷியன்கள்), நீரேற்றும் மோட்டார் இயக்குபவர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என மொத்தம் 11, 597 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடிநீர் வாரியத்தால் நேரடியாக நியமிக்கப்படாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான ஊதியம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக பணியாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.15,401 அல்லது அதற்கும் கூடுதலான தொகையை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அதில் ரூ.7,500 முதல் ரூ.9,800 வரை மட்டுமே ஊதியமாக வழங்கிவிட்டு மீதத்தொகையை சுருட்டி விடுகின்றனர் என்பது தான் குற்றச்சாட்டு ஆகும்.

இந்த வகையில் மாதத்திற்கு ரூ.7.5 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.90 கோடி சுருட்டப்படுகிறது. தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இந்தத் தொகையை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் கூட இந்த ஊழலுக்கு முடிவு கட்டப்படவில்லை. முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது முதலமைச்சரே சுட்டிக்காட்டியும் கூட இந்த ஊழல் தடுக்கப்படவில்லை. ஊழலுக்கு காரணமானவர்களும் தண்டிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு ஊழல் கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கிறது.

1971ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மலேரியா ஒழிப்புக்கான தினக்கூலி பணியாளர்களை கூடுதலாக நியமித்ததாகக் கூறி, அவர்களின் ஊதியத்தை அன்றைய சென்னை மாநகராட்சி ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சுருட்டிக் கொண்டனர். அப்போது ஊதியம் முழுமையாக சுருட்டப்பட்ட நிலையில், இப்போது ஊதியத்தில் பாதி சுருட்டப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் வங்கிக் கணக்குகள் மூலம் வரவு வைக்கப்பட வேண்டும் என்பது விதி. அவ்வாறு செய்தால் மோசடி அம்பலமாகி விடும் என்பதற்காக ஊதியம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை வழங்கும்படி தொழிலாளர் நலத்துறை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆகியவற்றின் அதிகாரிகள் பலமுறை கோரியும் அவற்றை குடிநீர்வாரிய செயற்பொறியாளர்களும், ஒப்பந்ததாரர்களும் வழங்க மறுக்கின்றனர். இதன் மூலம் ஊழலுக்கான ஆதாரங்களை அழிக்க அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் முயல்கின்றனர். இதை அரசு வேடிக்கை பார்ப்பது ஊழலுக்கு துணை போவது ஆகும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை சுருட்டுவதைப் போன்ற கொடுங்குற்றமும், பாவமும் உலகில் இல்லை. இந்த ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us