இரண்டு வாரங்களில் ஆஜராக எம்.எல்.ஏ. மகனுக்கு உத்தரவு
இரண்டு வாரங்களில் ஆஜராக எம்.எல்.ஏ. மகனுக்கு உத்தரவு
இரண்டு வாரங்களில் ஆஜராக எம்.எல்.ஏ. மகனுக்கு உத்தரவு
ADDED : ஜன 25, 2024 01:02 AM
சென்னை:வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வின் மகன், மருமகள், இரண்டு வாரங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ. இவரது வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, ஆன்ட்ரோ, அவரது மனைவி மார்லினா ஆகியோருக்கு எதிராக, நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஆதிதிராவிடருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
தாங்கள் சரண் அடையும் நாளில், தாக்கல் செய்யும் ஜாமின் மனுவை அன்றே பரிசீலிக்கும்படி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
அனைத்து வழக்குகளிலும், வழக்கமாக பிறப்பிக்கும் உத்தரவை பிறப்பிக்க முடியாது. இரண்டு வாரங்களில், சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாரர்கள் ஆஜராக வேண்டும்.
சட்டத்தில் கூறியபடி, பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரை சார்ந்தவருக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து, அவர்கள் தரப்பை கேட்டு, தகுதி அடிப்படையில் விரைந்து சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.