இந்தியா - இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டம் மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை
இந்தியா - இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டம் மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை
இந்தியா - இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டம் மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை
ADDED : பிப் 23, 2024 10:15 PM

சென்னை:'இந்தியா - இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை, மத்திய அரசு உடனடியாக நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தற்போது வரை, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில், 49 மீனவர்களும், 151 மீன்பிடிப் படகுகளும் உள்ளன. சிறை பிடிக்கப்பட்ட 151 படகுகளில், 12 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு உள்ளன.
இதில், மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளை மீட்டு, தமிழகம் கொண்டு வர, கடந்த அக்டோபர் மாதம், முதல்வர் நிதி ஒதுக்கி, மீட்புக்குழு அமைத்தார்.
ஆனால், தமிழகத்தின் மீட்புக்குழு இலங்கை சென்று, விடுதலை செய்யப்பட்ட படகுகளை, தமிழகம் கொண்டு வருவதற்கான அனுமதியை, மத்திய அரசு இன்றுவரை வழங்கவில்லை.
அதேபோல், தமிழக, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடத்தப்படும், இந்திய - இலங்கை கூட்டுப்பணிக் குழு கூட்டம், 2022 மார்ச் 25க்கு பிறகு இதுவரை நடக்கவில்லை.
எனவே, மீனவர்களையும், படகுகளையும் மீட்கவும், மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இந்தியா - இலங்கை கடற்பகுதியில், இரு நாட்டு மீனவர்களும், அச்சமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட, நெடுங்காலமாக நடத்தப்படாமல் இருக்கும், இந்திய - இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை, உடனடியாக நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.