இந்திய வீரர்களின் வெற்றி பேரணி: மும்பை மரைன் டிரைவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
இந்திய வீரர்களின் வெற்றி பேரணி: மும்பை மரைன் டிரைவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
இந்திய வீரர்களின் வெற்றி பேரணி: மும்பை மரைன் டிரைவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
UPDATED : ஜூலை 04, 2024 11:05 PM
ADDED : ஜூலை 04, 2024 07:19 PM

மும்பை: உலக கோப்பை வென்ற இந்திய அணியினர் இன்று மும்பையில் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலம் சென்றனர். வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.
வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் பைனலில் (பார்படாஸ்) 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பை வென்றது. பார்படாசில் ஏற்பட்ட 'பெரில்' புயல் காரணமாக, இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.பின்னர் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று காலை டில்லி விமான நிலையம் வந்திறங்கினர்.

பின் பிரதமர் மோடியை அவரது அலுவலக இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதையடுத்து இன்று (ஜூலை04) மும்பை மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, இந்திய வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக ('ரோடு ஷோ') சென்றனர்.பஸ் மீது இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பையுடன் போஸ் கொடுக்க, ரசிகர்கள் இந்திய வீரர்களை பார்த்த மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பினர்.
இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்து கொண்டிருந்த போது, பின் பகுதியில் இருந்த ரோகித் சர்மா ரசிகர்ககளை பார்த்து கயைசைத்து வந்தார். இதனை பார்த்த விராத் கோலி, தேசியக் கொடியை எடுத்து வந்து ரோகித் சர்மாவிடம் கொடுத்தார். அத்துடன், டி20 உலகக்கோப்பையை கையில் கொடுத்து, ரோகித் சர்மாவை விராத் கோலி பேருந்தின் முன் பகுதிக்கு அழைத்து வந்தார். அங்கே நின்றிருந்த பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா விலகிக் கொள்ள, டி20 உலகக்கோப்பையுடன் ரோகித் சர்மா - விராத் கோலி இணைந்து போஸ் கொடுத்தனர்.



பேரணி முடிந்து வான்கடே மைதானத்திற்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விராத் கோலி பேசியதாவது:உலகக்கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் எங்களை சரிவிலிருந்து மீட்டவர் பும்ரா; இறுதிப்போட்டிக்கு உயிர் கொடுத்து வெற்றிக்கு காரணமான பும்ராவை மீண்டும் மீண்டும் பாராட்டுகிறேன் என கூறினார்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது: இந்திய அணி ஒரு ஸ்பெஷலான அணி. இப்படி ஒரு அணி கிடைக்கப்பெற்றதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; இது ஒட்டுமொத்த தேசத்துக்கான வெற்றிக்கோப்பை என்றார்.
இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா பேசியதாவது:கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப்போவது இல்லை. எனது கெரியர் தற்போது தான் ஆரம்பித்துள்ளது; கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன். என்றார்.
பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது:இந்திய அணி என்னுடைய குடும்பத்தைப் போன்றது. கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்; இந்த அணிக்கு பயிற்சி அளித்ததில் பெருமை கொள்கிறேன் என்றார்.
பாராட்டு விழாவில் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.