பழமையான 40 கோடி ஆவணங்கள் ஜப்பான் திசு முறையில் பராமரிப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
பழமையான 40 கோடி ஆவணங்கள் ஜப்பான் திசு முறையில் பராமரிப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
பழமையான 40 கோடி ஆவணங்கள் ஜப்பான் திசு முறையில் பராமரிப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை: ''பழமையான ஆவணங் களை பாதுகாக்க, ஜப்பான் திசு முறையில் செப் பனிடுதல் பணி நடக்கிறது,'' என, அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தேசிய ஆவணக் காப்பகம், தமிழக ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 50வது தேசிய ஆவணக் காப்பாளர்கள் குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. பொது மக்களின் வசதிக்காக, பழமையான ஆவணங்கள், மின்னணு மயமாக்கப்பட்டு உள்ளன. அதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட http://www.digitamilnaduarchives.tn.gov.in/ என்ற இணையதளத்தை, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்.
மேலும், 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, 1857ம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்; மைசூர் போர்களும், தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்' என்ற இரண்டு நுால்களையும் அவர் வெளியிட்டார். பின், அமைச்சர் பேசியதாவது: இந்தியாவின் உண்மை வரலாற்றை ஆராய, ஆவணங்களை தேடி வரும் அறிஞர்களுக்கு ஆதாரங்களை வழங்கும் ஆவணக் காப்பாளர்கள் பணி மிகவும் முக்கியமானது.
நாட்டில் எத்தனை துறைகள் இருந்தாலும், அத்தனை துறைகளின் ஆவணங்களையும் பாதுகாத்து, அதை ஆவணக் காப்பகத்துறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது. ஆவணங்களே அரசு நிர்வாகத்தின் முதுகெலும்புகள். தமிழக ஆவணக் காப்பகம் மிகவும் பழமையானது. இங்கு, 300 ஆண்டுகள் பழமையான, 40 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. பழமையான ஆவணங்கள், நீண்ட காலம் நிலைத்திருக்க, ஜப்பான் திசு முறையை பயன்படுத்தி செப்பனிடுதல் போன்ற நவீன முறைகள் அமல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பேசினார்.