எம்.ஜி.ஆர். வழங்கிய உரிமையை மீட்டு ஒப்படைப்பதே லட்சியம்: பன்னீர்செல்வம்
எம்.ஜி.ஆர். வழங்கிய உரிமையை மீட்டு ஒப்படைப்பதே லட்சியம்: பன்னீர்செல்வம்
எம்.ஜி.ஆர். வழங்கிய உரிமையை மீட்டு ஒப்படைப்பதே லட்சியம்: பன்னீர்செல்வம்
ADDED : ஜன 10, 2024 11:36 PM

பெரம்பலுார்:''எம்.ஜி.ஆர்., தொண்டர்களுக்கு வழங்கிய உரிமையை மீட்டு, தொண்டர்களிடம் ஒப்படைப்பதே என் லட்சியம்,'' என்று அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அரியலுார், வாலாஜா நகரத்தில் நேற்று, அ.தி.முக., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
ஏழை, எளிய மக்களுக்கும், பாமர மக்களுக்கும் சிறப்பான ஆட்சியை தந்தவர் எம்.ஜி.ஆர்., அவர், அ.தி.மு.க.,வை துவக்கியபோது, 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதன் பின், இந்த இயக்கத்தை கட்டி காத்தவர் ஜெயலலிதா. அவர் கட்சிக்காக செய்த தியாகத்தால், ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கமாக வளர்ந்தது.
கட்சியில் பொதுச் செயலர், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், என்று சட்ட விதிகளை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்., அந்த விதியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பின்பற்றினார்.
பழனிசாமி, கட்சி விதியை மாற்றி, தொண்டர்களுக்கு வழங்கிய உரிமையை பறித்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளார்.
அவர், 228 பேரை வைத்து, பொதுக்குழுவை கூட்டி கட்சியை அபகரிப்பு செய்துள்ளார். நான்கு ஆண்டுகளாக முதல்வராக இருந்த 'ருசி' அவரை விடவில்லை. திரும்பவும் இந்த நாட்டை சூறையாடி, கொள்ளையடித்துச் செல்ல வேண்டும் என்று தான், கட்சியை அடாவடியாக அபகரித்திருக்கிறார். இது தான் நிதர்சனம்.
எனவே, எம்.ஜி.ஆர்., தொண்டர்களுக்கு வழங்கிய உரிமையை, பழனிசாமியிடம் இருந்து மீட்டு, அதை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே என் லட்சியம். மீண்டும் பொதுக் குழுவை கூட்டி, நிரந்தர பொதுச்செயலர் ஜெயலலிதா தான் என்று தீர்மானம் நிறைவேற்றுவோம்.
வரும் லோக்சபா தேர்தலில் உரிமை மீட்புக் குழு சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.