மாஸ்டர் பிளான் தாமதம்: கட்டுமான நிறுவனங்கள் திகைப்பு: 136 நகரங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா
மாஸ்டர் பிளான் தாமதம்: கட்டுமான நிறுவனங்கள் திகைப்பு: 136 நகரங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா
மாஸ்டர் பிளான் தாமதம்: கட்டுமான நிறுவனங்கள் திகைப்பு: 136 நகரங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா
ADDED : மே 22, 2025 02:58 AM

சென்னை: நகர வளர்ச்சி திட்டத்துக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதில் ஆண்டு கணக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழகம் முழுதும் கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டு செயல்பட முடியாத நிலையில் தவிப்பதாக, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' தமிழக பிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, கிரெடாய் தமிழக பிரிவு தலைவர் ஹபீப், செயலர் சாய்குமார் சுவாமிநாதன் ஆகியோர் கூறியதாவது:
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், 48.4 சதவீதம் அளவுக்கு நகர்ப்புற வளர்ச்சி உள்ளது. இதை கருத்தில் வைத்து, நகர்ப்புற திட்டமிடல் விஷயத்தில், அரசு துறையினர் கவனம் செலுத்த வேண்டும். சென்னைக்கு, 1975ல் முதலாவது, 'மாஸ்டர் பிளான்' எனும் முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டது. நீண்ட தாமதத்துக்கு பின், 2008ல் இரண்டாவது முழுமை திட்டம் வந்தது.
இந்நிலையில், சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பு பணி, 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தமிழகத்தில், 136 நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என, முதல்வர் அறிவித்தார். ஆனால், கோவை, மதுரை போன்ற நகரங்களின் முழுமை திட்டங்கள் கூட, இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்துவதற்காக, அங்கு எதிர்காலத்தில் என்ன வளர்ச்சி திட்டம் வரும் என்பது தெரியாமல், குழப்பத்தில் தவிக்கிறோம். முழுமை திட்டம் பிரதான ஆதாரம் என்பதால், அது தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்த வேண்டும். மேலும், முழுமை திட்டம் தயாரிப்பதில், எங்களை போன்ற அமைப்புகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கட்டுமான திட்ட அனுமதி பணிகளை விரைந்து முடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒற்றை சாளர முறையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பிற மாவட்டங்களில், சாதாரண வீடு கட்டுவோருக்கு உடனடி ஒப்புதல் கிடைக்கிறது. ஆனால், அடுக்குமாடி திட்டங்களுக்கு விண்ணப்பித்தால், ஒப்புதல் பெற, 9 மாதங்கள் வரை ஆகிறது. இதனால், நிலம் வாங்க நாங்கள் செய்த முதலீட்டுக்கான வட்டி உள்ளிட்ட செலவுகள் வெகுவாக அதிகரிக்கின்றன. அந்த கூடுதல் செலவுகள், வீட்டின் விலையில் தான் சேர்க்கப்படும். இதனால், வீடு வாங்கும் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.
கட்டுமான திட்டங்களின் மொத்த மதிப்பில், 25 சதவீத தொகை, அரசுக்கு வரி வருவாயாக கிடைக்கிறது. இந்த நிலையில், அந்த துறைக்கான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நியாயமாக இருக்கும். அடுக்குமாடி திட்டங்களுக்கு மின்சார இணைப்பு பெறவே, ஆறு மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. 'டிரான்ஸ்பார்மர் இல்லை, மீட்டர் இல்லை' என, ஒவ்வொரு காரணத்துக்கும் காத்திருப்பதால், வீடு ஒப்படைப்பு தாமதமாகிறது.
இந்த பிரச்னைகளை தீர்க்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கிரெடாய் நிர்வாகிகள் கூறினர்.