வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
ADDED : செப் 23, 2025 06:26 AM

சென்னை : 'வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் நேமூரில், அதிகபட்சமாக, 12 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்ததாக, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், 11; ஆரணியில், 9; விழுப்புரம் மாவட்டம் வளத்தியில், 7; அதே மாவட்டம் கஞ்சனுார், மைலம், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில், தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழக தென்மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல், மற்றொரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் அருகே, நேற்று காலை நிலவரப்படி, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த, 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
வரும், 25ல் மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக்கடலில், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைக்கு அப்பால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதனால், தமிழகத்தின் வடமாவட்டங்களில், சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். வரும், 27ம் தேதி வரை, தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.