Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பஸ் மட்டுமே செல்லும் பாதை நெரிசல் இல்லை; குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?

பஸ் மட்டுமே செல்லும் பாதை நெரிசல் இல்லை; குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?

பஸ் மட்டுமே செல்லும் பாதை நெரிசல் இல்லை; குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?

பஸ் மட்டுமே செல்லும் பாதை நெரிசல் இல்லை; குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?

ADDED : செப் 23, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
பஸ்கள் மட்டுமே செல்லும், பி.ஆர்.டி.எஸ்., திட்டம், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம், சென்னை மற்றும் கோவையில் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை, 3.90 கோடி. இதில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும், 3.50 கோடி. ஆண்டுதோறும், 10 முதல், 12 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், பல்வேறு முக்கிய வழித்தடங்களில் அமலில் உள்ள, பி.ஆர்.டி.எஸ்., எனப்படும், பஸ்களுக்கான தனி பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆமதாபாத்தில் தற்போதைய நிலவரப்படி, முக்கிய சாலை வழித்தடங்களில், 160 கி.மீ., துாரத்துக்கு பஸ்களுக்கான தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். தினமும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

நான்கு வழி சாலையில், நடுவில் இரு வழி பாதையாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் மேற்கூரை, இருக்கை, பேன் வசதியுடன் பஸ் நிலையங்கள் உள்ளன.

ஒவ்வொரு பஸ் நிலையத்தில் இருந்து வந்து, செல்லும் பயணியர் வசதிக்காக, பாதசாரி பாதைகளும் இருக்கின்றன. இந்த பாதையில் செல்லும் பஸ்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதில்லை; நீண்ட நேரமும் காத்திருப்பதில்லை. சிக்னலுக்காக மட்டுமே ஓரிரு நிமிடங்கள் காத்திருக்கின்றன.

இந்த தடத்தில், நெரிசல் இன்றி பஸ்கள் செல்வதை பார்க்க முடிகிறது. இருபுறமும் சாலையில் செல்லும் வாகனங்களால், இடையூறு ஏற்படாமல் செல்கின்றன. அதற்கு ஏற்றார் போல, சாலைகள் திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டத்தை, இனியும் தாமதிக்காமல், சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் செயல்படுத்த வேண்டும் என, போக்குவரத்து வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கட்டாயம் தேவை


இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., போக்குவரத்து துறை பிரிவு பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட பி.ஆர்.டி.எஸ்., திட்டம் நல்ல பலன் அளித்து வருகிறது. அடுத்தகட்டமாக, மேலும் பல வழித்தடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த நகரில் ஓரளவுக்கு நெரிசல் இன்றி பயணிக்க முடியும்.

இதுபோன்ற திட்டத்தை சென்னையிலும் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில், மின்சார பஸ்கள் இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் வந்தாலும், பி.ஆர்.டி.எஸ்., திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும். நெரிசல் இன்றி விரைவான பயணம் கிடைக்கும் போது, கார், இருசக்கர வாகனங்களின் பயன்பாடு கணிசமாக குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தாமதம் ஏன்? சென்னையில் முக்கிய வழித்தடத்தில், பி.ஆர்.டி.எஸ்., திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்ப்பட்டது. இதற்கிடையே, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடப்பதால், தற்போதைக்கு இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடியும் போது, இந்த திட்டம் செயலுக்கு வரும் என்கின்றனர், தமிழக போக்குவரத் துறை அதிகாரிகள். ***



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us