Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

UPDATED : ஜூலை 23, 2024 06:21 PMADDED : ஜூலை 23, 2024 06:10 PM


Google News
Latest Tamil News
சென்னை: ‛‛ வரும் 27ம் தேதி டில்லியில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி: மத்திய பட்ஜெட்டை ஒட்டி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளேன். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 3வது முறையாக ஓட்டு போட்ட மக்களுக்கு பாஜ., கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்ய தயாராக இல்லை என்பதை பட்ஜெட் காட்டுகிறது.

சந்தேகம்


பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என என்னென்ன திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால் அது எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்த சில மாநில கட்சிகளை திருப்திபடுத்தும் வகையில் சில திட்டங்கள் அறிவித்துள்ளனர்.

அதையும் நிறைவேற்றுவார்களா என சந்தேகம் தான். தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் என அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் இன்று வரை ஏமாற்றி கொண்டுள்ளனரோ அதேபோன்று அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

கேள்வி

தமிழகம் இரண்டு பேரிடர்களை சந்தித்துள்ளது. ரூ.37 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டோம். இதுவரை ரூ.276 கோடி தான் கொடுத்துள்ளனர். அது சட்டப்படி வரவேண்டிய தொகை தான். பேரிடர் பாதிப்புகளை மத்திய பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் பார்வையிட்டு சென்றனர். இப்படித் தான் தமிழக மக்களை பா.ஜ., மதிக்கிறதா என்பது எனது கேள்வி

இல்லை

தமிழகத்திற்கான சிறப்பு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்களை அறிவிக்கவில்லை. பா.ஜ.,வை தாங்கி பிடிக்கும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களை நிதியமைச்சர் மறந்துவிட்டார்.

தமிழகம் என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட்டில் இல்லை என்பதை சொல்வதை விட, மத்திய பா.ஜ.,வின் செயல்பாடு, சிந்தனைகளில் தமிழகம் இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும் தான் அறிக்கையில் உள்ளது. நாட்டின் பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த நிதி நிலை அறிக்கையில் நீதி இல்லை. அநீதி தான் உள்ளது.

போராடுவோம்

வரும் 27 ம் தேதி நிடி ஆயோக் கூட்டம் நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க திட்டமிட்டு தயாராகி கொண்டு இருந்தேன். பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளேன். புறக்கணிக்க போகிறேன். தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது தான் சரி. தமிழகத்தின் உரிமைகள், தேவைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us