நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு

சென்னை:அரசுக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவு, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு எதிராக புகார் அளித்தார்.
அதில், 'சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது, போலி ஆவணங்கள் வாயிலாக, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா உள்ளிட்டோருக்கு எதிராக, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் போன்ற பிரிவுகளின் கீழ், 2019ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர், நேரில் ஆஜராக, நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே அமைச்சர் மீதான வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டது. நீதிபதி என்.வெங்கடவரதன் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை.
அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்காக, அமைச்சர் வெளிநாடு சென்றிருப்பதால், விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரினர்.
அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை, ஜூன் 17க்கு தள்ளிவைத்தார்.