கரூருக்கு வேட்பாளர் கிடைக்காமல் திணறல் முன்னாள் அமைச்சர் போட்டியிட நெருக்கடி
கரூருக்கு வேட்பாளர் கிடைக்காமல் திணறல் முன்னாள் அமைச்சர் போட்டியிட நெருக்கடி
கரூருக்கு வேட்பாளர் கிடைக்காமல் திணறல் முன்னாள் அமைச்சர் போட்டியிட நெருக்கடி
ADDED : பிப் 11, 2024 12:57 AM
கரூர்:கரூர் லோக்சபா தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்காமல், அ.தி.மு.க., திணறி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போட்டியிடச் சொல்லி, அக்கட்சி தலைமை நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
கரூர் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., -தி.மு.க., - பா.ஜ.,வினர் தேர்தல் பணிகளை துவங்கி உள்ளனர். கரூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. 1989, 1998, 2009, 2014 ஆகிய தேர்தலில் தம்பிதுரையும், 1999ல் முன்னாள் அமைச்சர் சின்னசாமியும் வெற்றி பெற்றனர்.
வரும் தேர்தலில் போட்டியிட, வலிமையான வேட்பாளர் கிடைக்காமல் அ.தி.மு.க., திணறி வருகிறது.
இது குறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பதால், கரூரில் தம்பிதுரை போட்டியிட வாய்ப்பில்லை. தற்போது, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், கரூர் மேற்கு ஒன்றிய செயலர் கமலகண்ணன் உட்பட சிலர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் சின்னசாமி வலுவான வேட்பாளர் என்றாலும் கூட, அவரது பொருளாதார நிலைமை காரணமாக, அவருக்கு மீண்டும் சீட் வழங்க தலைமைதயக்கம் காட்டுகிறது.
வலுவான கூட்டணி இல்லாததால், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் போட்டியிட விரும்பவில்லை எனக்கூறி பின்வாங்கியுள்ளார். கரூர் தாண்டி புறநகர் மற்றும் கிராமங்களில் போதுமான அளவுக்கு அறிமுகம் இல்லாதவர் என்பதால், கமலகண்ணனை போட்டியிட வைக்க தலைமை அச்சப்படுகிறது.
கடந்த 2018ல், தி.மு.க.,வில் அமைச்சர் செந்தில் பாலாஜி இணைந்த பின், தொடர்ந்து அக்கட்சி வெற்றி பெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிட்டால், தி.மு.க., கூட்டணிக்கு சரியான போட்டியை உருவாக்க முடியும். ஆனால், அவரோ, மாநில அரசியல் விட்டு மத்திய அரசியலுக்கு செல்ல மறுத்து விட்டார்.
இருந்தபோதும், 'நீங்கள் தான் நிற்க வேண்டும்' எனச் சொல்லி கட்சி தலைமை அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கு அவர், தொடர்ந்து மறுத்து வருவதால், வேறு வலுவான வேட்பாளர் கிடைக்காமல், தலைமை சிக்கி திணறி வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சட்டசபை தேர்தலே விருப்பம்
முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில்,'' நான், கரூர் எம்.பி., தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்பது சரியான தகவல் அல்ல. என்னுடைய விருப்பமெல்லாம் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது தான். கூட்டணி முடிவான பின் தான், வேட்பாளர் தேர்வு நடைபெறும். தலைமை யாரை வேட்பாளாராக அறிவிக்கிறதோ, அவர் வேட்பாளராக இருப்பார். மற்றபடி, கட்சி யாரையும் நிர்பந்தப்படுத்தி வேட்பாளராக்காது,'' என்றார்.