'சுங்க கட்டணமா கேக்குற...? ' புல்டோசரை ஏற்றி சாவடி தகர்ப்பு
'சுங்க கட்டணமா கேக்குற...? ' புல்டோசரை ஏற்றி சாவடி தகர்ப்பு
'சுங்க கட்டணமா கேக்குற...? ' புல்டோசரை ஏற்றி சாவடி தகர்ப்பு
UPDATED : ஜூன் 11, 2024 10:28 PM
ADDED : ஜூன் 11, 2024 10:18 PM

ஹாப்பூர்: உத்தர பிரதேசத்தில் சுங்க கட்டணம் கேட்டதால், ஆத்திரமடைந்த புல்டோசர் ஆப்பரேட்டர், சுங்கச்சாவடியை தகர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் டில்லி - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சாஜர்சி சுங்கச்சாவடி இயங்கி வருகிறது.
இங்கு, நேற்று காலை புல்டோசர் வாகனத்துடன் வந்த நபர், சுங்கச்சாவடியை கடந்து செல்ல முயற்சித்தார்.
அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள், அவரை இடைமறித்து சுங்க கட்டணம் செலுத்தும்படி கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த புல்டோசர் ஆப்பரேட்டர், திடீரென புல்டோசர் வாயிலாக சுங்கச்சாவடியை தகர்க்க துவங்கினார்.
இதில், கட்டணம் வசூலிக்கும் மையங்கள் இடிந்து விழுந்தன. இச்சம்பவத்தை, அங்கிருந்தோர் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்ததுடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
இது, வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக ஹாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்நபரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், புல்டோசரையும் பறிமுதல் செய்தனர்.