சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகா அரசு மதிக்கவில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு
சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகா அரசு மதிக்கவில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு
சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகா அரசு மதிக்கவில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 15, 2024 12:56 PM
ADDED : ஜூலை 15, 2024 10:39 AM

வேலூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
''தமிழகத்துக்கு தினமும் 1 டி.எம்.சி., காவிரி நீர் திறக்க முடியாது. வினாடிக்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவை எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்படும்,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் சித்தராமையா பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூரில் நிருபர்கள் சந்திப்பில், துரைமுருகன் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் உள்ளது. கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணைக்கு தற்போது 4 ஆயிரம் கனஅடி தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்னை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் என்னிடம் ஆலோசனை நடத்தினார். அனைத்து கட்சிக் கூட்டம் நடத்துவதா அல்லது கடிதம் எழுதுவதா என முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார்.
கர்நாடகா கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் மழை பெய்தால் தண்ணீர் வந்து தானே ஆக வேண்டும். என்னால் முடிந்த அளவுக்கு பிரச்னையைக் கையாண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நாளை (ஜூலை 16) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கர்நாடகா அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடகா அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.