Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார்; பக்தர்கள் பரவசம்

பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார்; பக்தர்கள் பரவசம்

பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார்; பக்தர்கள் பரவசம்

பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார்; பக்தர்கள் பரவசம்

UPDATED : மே 13, 2025 05:25 AMADDED : மே 12, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (12.05.25) காலை 6 மணியளவில் வைகை ஆற்றில், கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் விண்ணை பிளந்தது.

மதுரை விழாக்கோலம்:


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், இன்று நடக்கிறது.

Image 1417100

இதற்காக, மே 10 ல் அழர்கோயிலில் புறப்பட்டு மதுரை வந்த கள்ளழகருக்கு நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மூன்றுமாவடியில் 'எதிர்சேவை' நடந்தது. இன்று (மே 12) அதிகாலை கருப்பணசுவாமி கோயில் முன், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மீண்டும் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். வழிநெடுகிலும், கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் பக்தர்கள், அவரை கண்குளிர தரிசனம் செய்தனர்.

Image 1417101

பச்சைப்பட்டு


இதனை தொடர்ந்து காலை 6 மணியளவில், பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார். வெள்ளிக்குதிரை வாகனத்தில், அவரை வீரராகவ பெருமாள் வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது ‛கோவிந்தா கோவிந்தா' என்று பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர். பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Image 1417102

நாளை 13ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பின்னர் கருட வாகனத்தில் தேனூார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சியும் பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார்.

கவர்னர் ரவி வாழ்த்து

இது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரசித்தி பெற்ற வைகை கள்ளழகர் திருவிழாவையொட்டி வாழ்த்துகள். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம். இந்த கொண்டாட்டம் நமது பாரம்பரியத்தின் வலிமையையும், காலத்தால் அழியாத ஒற்றுமையில் நம்மை ஒன்றிணைக்கும் உணர்வையும் தெளிவாக பிரதிபலிக்கிறது. கள்ளழகரின் அருள் நம் அனைவருக்கும் நல்லிணக்கம், வளம் மற்றும் ஆன்மிக பலத்தையும், நமது தேசத்துக்கு அதிக மகிமையையும் கொண்டு வரட்டும். இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us