வடகாடு சம்பவத்தில் தவறான தகவல்; திருமாவளவன் மீது போலீசில் புகார்
வடகாடு சம்பவத்தில் தவறான தகவல்; திருமாவளவன் மீது போலீசில் புகார்
வடகாடு சம்பவத்தில் தவறான தகவல்; திருமாவளவன் மீது போலீசில் புகார்
ADDED : மே 12, 2025 06:36 AM

புதுக்கோட்டை : வடகாடு சம்பவம் தொடர்பாக, வி.சி., தலைவர் திருமாவளவன் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து, இரு சமூக மக்களிடையே பிரிவினையை துாண்டிவிடுவதாக கூறி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வடகாடில் வழக்கமாக தேர்வடம் தொட்டுக்கொடுக்கும் சேர்வைகாரன்பட்டிகாரர்கள் அளித்த புகார் மனு:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு சம்பவம் தொடர்பாக, வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி கொடுத்த போது, வடகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவில், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் தேர்வடம் தொட்டு கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டு தேரோட்டத்தில் வழக்கம் போல, வடம் தொட்டு கொடுக்க சென்ற அவர்களை தாக்கி, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை தீயிட்டு கொளுத்தி, பலரை காயப்படுத்தி, பொருட்களை சேதப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து, வடகாடு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், 300 ஆண்டுகளாக தேரோட்டத்தில் சேர்வைகாரன்பட்டி சேர்வை வகையறாக்களை சேர்ந்தவர்களே தேர்வடம் தொட்டு கொடுத்து வருகிறோம். அதேபோலவே, இந்த ஆண்டும் தேரோட்டத்தில் நடந்தது.
ஆனால், வி.சி., தலைவர் திருமாவளவன், ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்களில் பேட்டியாகவும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.
இது, எங்களின் பாரம்பரிய உரிமைக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், உண்மைக்கு புறம்பான தகவலால், இருதரப்பு மோதலை துாண்டிவிடுவது போலவும் உள்ளது. தவறான தகவலை பரப்பி அவதுாறு செய்துள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 'வடகாடு கோவில் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதல் விவகாரம் தொடர்பாக, வெளியிட்ட அறிக்கை தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்' என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.