Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சமூக மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுரை

சமூக மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுரை

சமூக மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுரை

சமூக மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுரை

ADDED : ஜூன் 07, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
சென்னை:''சமூகத்தின் மேம்பாட்டுக்காக, வழக்கறிஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பேசினார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன். வரும் 8ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். உயர் நீதிமன்றம் சார்பில் நேற்று, அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசியதாவது:

சீனாவில் பாரம்பரியமாக ஆண்டுகளுக்கு பெயர் சூட்டுவது உண்டு. அதேபோல், இங்கு 1963ம் ஆண்டுக்கு, 'நீதிபதிகள் ஆண்டு' என, பெயர் சூட்ட வேண்டும். ஏனெனில், கடந்த 1963ம் ஆண்டில் பிறந்த 12 நீதிபதிகள், இந்த ஆண்டு பணி ஓய்வு பெறுகின்றனர்.

இவர்களில், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை ஏழு நீதிபதிகள் ஓய்வு பெற்றுள்ளனர்.

இதன் வாயிலாக, மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையில், 15 சதவீதத்தை இழந்து உள்ளோம். புதிய நீதிபதிகளை நியமிக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பணி ஓய்வு பெறும் நீதிபதி டீக்காராமன், தன் பதவி காலத்தில், 45,000 வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி தெரிவித்து, நீதிபதி டீக்காராமன் பேசியதாவது:

இருபது ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரியில் நீதிபதியாக பதவி ஏற்ற அதே நாளில் ஓய்வு பெறுகிறேன். என் பணி காலத்தில் பல்வேறு வழக்குகளை கையாண்டு, தீர்ப்பு அளித்துள்ளேன்.

ஆனால், அவற்றில் சந்தித்த வித்தியாசமான ஒரு வழக்கை மறக்க முடியாது. மதுரையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த காலத்தில், திருவாடானை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி, அவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்தது தொடர்பான வழக்கை விசாரித்தேன்.

அப்போது, நீதிமன்றத்துக்கு வெளியே, 400 முதல் 500 பேர் வேல் கம்புடன் திரண்டிருந்தனர். முக்கிய வழக்கு என்பதால், எனக்கு 14 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதை அடுத்து, இந்த வழக்கு ரத்தானது.

வழக்கறிஞர்கள் தங்கள் தொழில் மற்றும் சமுதாயத்தை மேம்படுத்த, அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, 'நீதிபதி' என்ற உன்னதமான நிலையை எட்ட முக்கிய காரணமாக இருந்த பெற்றோரை குறிப்பிட்டு பேசும்போது, கண்ணீர் விட்டு அழுதார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us