கழிவு நீர் லாரிகளில் பால் எடுத்து செல்ல அனுமதி? டெண்டரை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை
கழிவு நீர் லாரிகளில் பால் எடுத்து செல்ல அனுமதி? டெண்டரை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை
கழிவு நீர் லாரிகளில் பால் எடுத்து செல்ல அனுமதி? டெண்டரை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை
ADDED : செப் 22, 2025 03:35 AM
சென்னை: 'டெண்டர்' விதிகளுக்கு மாறாக, கழிவுநீர் எடுத்து செல்லும் லாரிகள், ஆவின் பால் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது
ஆவின் நிறுவனத்துக்கு பால் கொண்டு செல்ல, 143 டேங்கர் லாரிகளை வாடகைக்கு பெறுவது தொடர்பாக, கடந்த ஜூன் 6ம் தேதி, தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு டெண்டர் கோரியது. இந்த டெண்டரில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதால், அதை ரத்து செய்யக்கோரி, ஒப்பந்ததாரர் ஞானசேகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் கூறியிருந்ததாவது:
பிரதான பால் பண்ணைகளில் இருந்து, பாலை எடுத்து சென்று, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல்வேறு சேகரிப்பு மையங்களுக்கு வழங்க வேண்டும்.
ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகள். ஜூலை, 23ல் 'ஆன்லைன் டெண்டர்' திறக்கப்பட்டது. உணவு பொருளான பால் எடுத்து வரும் வாகனம், குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருக்க வேண்டும்.
ஆனால், உணவு பாதுகாப்பு துறை சான்று பெறாத லாரிகள், அதாவது, கழிவுநீர், குடிநீர் எடுத்து வர பயன்படுத்தப்படும் லாரிகளை டெண்டரில் பங்கேற்க, அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். எனவே, அந்த டெண்டரை ரத்து செய்து, புதிதாக டெண்டர் வெளியிட வேண்டும்.
இவ்வாறு மனு வில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டெண்டர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'டெண்டர் நடைமுறைகள் முடியும் முன்னரே, வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டு உள்ளது.
மனுதாரர் தரப்பில் எழுப்பிய ஆ ட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு, தொழில்நுட்ப ஏலம் மதிப்பீடு செய்யப்பட்டு, இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்று, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தடை உத்தரவில் சிலவற்றை மாற்றியமைத்து உத்தரவிட்டு, நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.