நெல் சாகுபடி தொடர்ந்து அதிகரிப்பு மானியங்களை குறைக்க அரசு முடிவு
நெல் சாகுபடி தொடர்ந்து அதிகரிப்பு மானியங்களை குறைக்க அரசு முடிவு
நெல் சாகுபடி தொடர்ந்து அதிகரிப்பு மானியங்களை குறைக்க அரசு முடிவு
ADDED : செப் 22, 2025 03:35 AM

சென்னை: தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சம்பா பருவத்தில் மானிய சலுகைகளை குறைக்க, வேளாண் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக, 49.50 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் வாயிலாக, 83 லட்சம் டன் வரை, நெல் உற்பத்தியாகிறது.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஜூன் முதல் ஜனவரி வரை, குறுவை மற்றும் சம்பா பருவங்களில், அதிகளவில் நெல் சாகுபடி நடக்கிறது.
அதேநேரத்தில், மற்ற மாவட்டங்களிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பருவங்களில் உற்பத்தியாகும் நெல், அரசின் உணவு தானிய திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
நடப்பாண்டு, அணைகள், ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழையும் பரவலாக பெய்து வருகிறது.
இதனால், பாசன பற்றாக்குறை நீங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில், முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு, 6.09 லட்சம் ஏக்கரில், குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது.
மற்ற மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் அறுவடையும் துவங்கி உள்ளது. நெல் சாகுபடி அதிகரித்த நிலையில், உணவு தானிய திட்டத்திற்கான கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குறுவை அறுவடை செய்த கையோடு, சம்பா சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில், 15 லட்சம் ஏக்கரிலும், மற்ற மாவட்டங்களில், 25 லட்சம் ஏக்கர் வரையும், சாகுபடி நடக்க வாய்ப்புள்ளதாக, வேளாண் துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.
இதனால், நெல் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நேரடி நெல் கொள்முதல் வாயிலாக, அரசின் செலவு கணிசமாக அதிகரிக்கும். கொள்முதலில் பிரச்னை ஏற்பட்டால், சட்டசபை தேர்தல் நேரத்தில், அரசுக்கு நெருக்கடி ஏற்படும்.
குறுவை உள்ளிட்ட சிறப்பு தொகுப்பு திட்டங்கள், மானிய உதவிகள் வாயிலாகவே, நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. எனவே, அதற்கான மானியத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்க வேண்டாம் என, வேளாண் துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்தே, மாவட்ட இணை இயக்குநர்களுக்கு, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
விவசாயிகளை கவர்வதற்காக திட்டமிடப்பட்ட சம்பா சிறப்பு தொகுப்பும், ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், சாகுபடி உதவி கோரும் விவசாயிகளிடம், வேளாண் துறையினர் பாராமுகமாக உள்ளனர்.