உள்கட்டமைப்பு கட்டணம் சதுர அடிக்கு ரூ.70.83: புதிய மனைப்பிரிவுகளுக்கு அரசு நிர்ணயம்
உள்கட்டமைப்பு கட்டணம் சதுர அடிக்கு ரூ.70.83: புதிய மனைப்பிரிவுகளுக்கு அரசு நிர்ணயம்
உள்கட்டமைப்பு கட்டணம் சதுர அடிக்கு ரூ.70.83: புதிய மனைப்பிரிவுகளுக்கு அரசு நிர்ணயம்
ADDED : மே 26, 2025 12:30 AM

சென்னை: 'ஊராட்சி பகுதிகளில் புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துவோர், சாலை, வடிகால், மின்விளக்கு போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்காக, சதுர அடிக்கு 70.83 ரூபாய் செலுத்த வேண்டும்' என, ஊரக வளர்ச்சி துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் பொது கட்டட விதிகளின் அடிப்படையில், புதிய மனைப்பிரிவு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
நடைமுறை சிக்கல்
இதில், ஊராட்சி பகுதிகளில் அறிவிக்கப்படும் திட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை, சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும் என, 2020ல் உத்தரவிடப்பட்டது.
ஆனால், இதில் சிறிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவோருக்கு, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது.
எனவே, ஊராட்சி பகுதிகளில் புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தும் போது, அதில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தொகையை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும், இதற்கான தொகையை நிர்ணயிப்பதில், உள்ளாட்சிகள் நிலையில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டன. இதை கருத்தில் வைத்து, புதிய கட்டண விகிதங்களை, ஊரக வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கலெக்டர்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா பிறப்பித்து உள்ள உத்தரவு:
தமிழகத்தில் ஊராட்சி அமைப்புகள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஒவ்வொரு பகுதியிலும் சாலைகள், மழைநீர் வடிகால், மின் விளக்குகள் அமைப்பதற்கு ஏற்படும் செலவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
வழிகாட்டுதல்கள்
அதன்படி, ஊராட்சியின் வகைப்பாடு, புதிய மனைப்பிரிவின் பரப்பளவு அடிப்படையில், இதற்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதாவது, புதிய மனைப்பிரிவு திட்டங்களில், உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சதுர அடிக்கு, 60.10 முதல், 70.83 ரூபாய் வரை வசூலிக்கலாம்.
இதற்காக தயாரிக்கப்பட்ட நிலையான வழிகாட்டுதல்கள் அடிப்படையில் தான், உள்ளாட்சி அமைப்புகள் கட்டணங்களை வசூலிக்க வேண்டும். குறிப்பாக, அடிப்படை வசதிகள் எப்படி அமைய வேண்டும் என்று இதில் குறிப்பிடப்பட்டு உள்ளதோ, அதை சரியாக உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.